சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன

கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை
கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாடுகளை பிடிக்கும் பணி
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம், டவுன்ஹால், கெம்பட்டிகாலனி, ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் சாலை, குனியமுத்தூர் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள் சென்று வர இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகரில் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார். இதையடுத்து கால்நடைகளை பிடிப்பதற்கு என ஹைட்ராலிக் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உக்கடம் மார்க்கெட் பகுதிக்கு வந்தனர். அங்கு போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த 5 மாடுகளை அதிகாரிகள் பிடித்து கோவை வ.உ.சி. பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
குற்றவியல் நடவடிக்கை
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதுகுறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. எனவே தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 மாடுகள் பிடிக்கப்பட்டன. முதல் தடவை பிடிபட்ட மாட்டின் உரிமையாளர் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி மீட்டு செல்ல வேண்டும். அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் பிடிபட்ட மாடுகள் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு அந்த தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும். மேலும் பிடிபட்ட மாடுகள் மீண்டும் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றினால் மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






