சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு மண் எடுப்பதை தடுக்க வேண்டும்
காரைமேடு கிராமத்தில் இருந்து சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி காரைமேடு கிராமமக்கள், நாம் தமிழர் கட்சி நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி காரைமேடு கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு அருகில் நெடுஞ்சாலைதுறைக்கும், சி.பி.சி.எல். நிறுவனத்திற்கும் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. எனவே பொதுமக்களின் நலன் கருதி சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு மண் எடுப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.