அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்


அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
x

மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை படுதோல்வியடையச் செய்து மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

மோடி அரசாங்கத்தின் மோசமான செயல்பாடுகள், தேர்தல் பத்திர ஊழல்கள் அம்பலமாகி மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியினால் பா.ஜ.கவும், மோடியும் பீதியில் உள்ளனர். இதனை திசை திருப்பும் நோக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மோடி அரசின் இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகளும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், வரும் தேர்தலில் மோடி அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டுமென்ற ஒற்றைக் குறிக்கோளோடு உறுதிபூண்டுள்ள எதிர்கட்சி தலைவர்களை குறிவைத்து கைது செய்வது இதன் மூலம் தெளிவாகிறது. தேர்தல் நடைபெறும் நேரத்திலேயே பா.ஜ.கவினர் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் போல் பாசிச பாணி நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றால் இன்னும் மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களையும், ஜனநாயகத்தையும் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொள்வார்கள்.

எனவே, வரும் மக்களவை தேர்தல் பாசிசத்திற்கும் - ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் மிக முக்கியமான தேர்தலாகும். இத்தேர்தலில் பா.ஜ.கவை படுதோல்வியடையச் செய்து மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி கேட்டுக் கொள்கிறது.

கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசிற்கு எதிராகவும், மக்கள் நலத்திட்டங்களையும் - சட்டங்களையும் முடக்கும் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்ய மறுத்த கவர்னரின் நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு முறியடித்துள்ளது. க.பொன்முடியின் உரிமையையும், ஜனநாயக உரிமையையும் சுப்ரீம் கோர்ட்டு நிலை நாட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள க. பொன்முடிக்கு வாழ்த்துக்கள். சட்டப்போராட்டம் நடத்தி ஜனநாயக உரிமையை நிலைநாட்டிய முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story