பட்டாசு விற்பனையில் மந்த நிலை நீடிக்கிறது


பட்டாசு விற்பனையில் மந்த நிலை நீடிக்கிறது
x

சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்த நிலையில் இருப்பதால் ஆலை மற்றும் கடை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்த நிலையில் இருப்பதால் ஆலை மற்றும் கடை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

30 சதவீத பட்டாசு

இந்த ஆண்டு தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டை விட 30 சதவீத பட்டாசுகள் இந்த ஆண்டு குறைவாக உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வழக்கமாக வெளியூர் வியாபாரிகள் விநாயகர் சதுர்த்தியை கணக்கில் கொண்டு தங்களுக்கு தேவையான பட்டாசுகளை சிவகாசியில் உள்ள மொத்த விற்பனை கடைகளுக்கு நேரில் வந்து ஆர்டர் செய்து வழக்கம். அதே போல் இந்த வருடமும் அதற்காக பட்டாசு கடைகள் விலை பட்டியலை தயார் செய்து வைத்துள்ள நிலையில் வெளியூர் வியாபாரிகள் இன்றி பட்டாசு கடைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

விலை உயர வாய்ப்பு

இதனால் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை வழக்கம் போல் இருக்குமா? என்ற அச்சம் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு கடை அதிபர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்டாசு கடை உரிமையாளர் அன்பரசு கூறியதாவது:-

வழக்கத்தை விட இந்த ஆண்டு மூலப்பொருட்களின் விலை உயர்வால் பட்டாசுகளின் விலையும் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் பல புதிய பட்டாசுகளை இந்த ஆண்டு சில நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளது. அடுத்த வாரம் முதல் பட்டாசு விற்பனை சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டில் இதே நேரத்தில் 60 சதவீதம் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 30 சதவீதம் பட்டாசுகள் கூட விற்பனை செய்யப்படவில்லை.

இதனால் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத நிலை இருக்கிறது. குறைந்த அளவில் பட்டாசுகள் இருப்பதால் இந்த ஆண்டு பட்டாசுக்கு தட்டுப்பாடு இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story