பறவைகளுக்காக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத தேர்த்தங்கல் கிராம மக்கள்
விருந்தாளிகளாக வரும் பறவைகளுக்காக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் இருப்பதை கிராம மக்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடித்து வருகின்றனர்.
விருந்தாளிகளாக வரும் பறவைகளுக்காக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் இருப்பதை கிராம மக்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடித்து வருகின்றனர்.
சரணாலயம்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேர்த்தங்கல் கிராமம். இங்கு பறவைகள் சரணாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மஞ்சள் மூக்கு நாரை, செந்நாரை, சாம்பல் நிற நாரை, கூழைக்கடா பலவிதமான வாத்துக்கள், நீர்க்காகம், வெள்ளை நிற கொக்குகள் என பலவிதமான பறவைகள் வரும். இவ்வாறு வரும் பறவைகள் மீண்டும் ஏப்ரல் அல்லது மே மாதம் திரும்பி சென்று விடும்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே மழை சீசன் தொடங்கி உள்ள நிலையில் நாரைகள் மற்றும் கொக்குகள் அதிக அளவில் இங்கு வந்து மரக்கிளைகளில் கூடுகட்ட தொடங்கி உள்ளன. இதனிடையே இந்த கிராமத்தில் உள்ள கிராம மக்கள் விருந்தாளிகளாக தங்கள் கிராமத்திற்கு வரும் பறவைகளை நேசிக்கும் வகையில் பறவைகளுக்காகவே தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதை தவிர்த்து கட்டுப்பாடுகளுடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
தடை
இதுகுறித்து தேர்த்தங்கல் கிராமத்தினர் கூறியதாவது:-
ஊராட்சி தலைவர் தேன்மொழி பாலசுப்பிரமணியன்: எங்கள் கிராமத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் இந்த சீசனில் பறவைகள் வரத் தொடங்கி விடும். விருந்தாளிகளாக வரும் பறவைகளை வரவேற்று அவைகள் இங்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் மரக் கிளைகளில் கூடுகட்டி வாழ ஆண்டுதோறும் தீபாவளி அன்று எங்கள் கிராமத்தில் பட்டாசுகள் வெடிக்க கிராம நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் வீட்டு வாசல்களில் குழந்தைகள் சத்தம் இல்லாத வெடிகளை வீடுகளின் வாசலில் மட்டுமே வெடிக்கலாம்.
விவசாயி வேலாயுதம்: நீர்நிலையில் அதிகமான மரங்கள் நட்டு வளர்ந்த பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக பறவைகள் வருகின்றன. பறவைகளுக்காகவே குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் அதிக சத்தம் தரும் பட்டாசுகளை வெடிப்பதில்லை. ஆண்டாண்டுகாலமாக இதை கடைபிடித்து வருகிறோம்.
வருத்தம் இல்லை
தேர்த்தங்கல் கிராமத்தை சேர்ந்த கலையரசி: பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டால் பறவைகள் அனைத்தும் தங்காமல் இடம்பெயர்ந்து விடும் என்ற காரணத்தினால் தீபாவளி அன்று மட்டுமல்ல எப்போதும் கிராமத்தில் யாரும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று கட்டுப்பாட்டுடன் உள்ளோம். பறவைகள் அதிகம் வருவதால் நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை கூட விவசாயத்திற்கு அதிகம் பயன் படுத்தக்கூடாது என்றும் கட்டுப்பாடு உள்ளது. பறவைகளுக்காக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் இருப்பதால் எங்களுக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. எங்களுக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது.
விவசாயி நாகசுப்பிரமணியன்: எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஊர்களில் இருந்தும் யாரும் வந்து கண்மாய்கரையை சுற்றி சத்தம் தரும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்றும் கண்காணித்தும் வருகிறோம். பறவைகளுக்காகவே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்ற கட்டுப்பாடுகளுடன் பின்பற்றி செயல்பட்டு வருகின்றோம். இது எங்களுக்கு ஒரு விதமான மகிழ்ச்சி தான் எந்த ஒரு வருத்தமும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.