கிரைம் செய்திகள்
கிரைம் செய்திகள்
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 135 பேர் மீது வழக்கு
*மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று முன்தினம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சட்டவிரோதமாக ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. பத்மாவதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்பட 135 பேரை திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. பத்மாவதி உள்பட 135 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறையில் அடைப்பு
*திருச்சி காந்திமார்க்கெட் பிரபாத் ரவுண்டானா பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்த பாபு (57) என்பவரை காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.110 மற்றும், லாட்டரி சீட்டுகள் எண்கள் எழுதிய காகிதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
*திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் (30). வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இவரது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
2 குழந்தைகளுடன் தாய் மாயம்
*திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நேதாஜி தெருவை சேர்ந்தவர் குமார் (38). இவருடைய மனைவி அனிதா (35). இவர்களுக்கு லெனின் (5), ஜஸ்வின் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் அனிதா சிலரிடம் பணம் கடன்வாங்கியுள்ளார். ஆனால் அதை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேதனையில் இருந்த அவர், சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவா், பின்னர் வீடுதிரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.