கிரைம் செய்திகள்
கிரைம் செய்திகள்
பேட்டரிகள் திருட்டு
*திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 21). இவர் கே.கே.நகர் தங்கையா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டை பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் பின்பக்க கண்ணாடி உடைந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் உள்ளே இருந்த இன்வெட்டர் பேட்டரி திருட்டு போயிருந்தது. மர்ம ஆசாமிகள், வீட்டின் பின்பக்க ஜன்னலின் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து உள்ளே நுழைந்து பேட்டரியை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் மாயம்
*திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி கண்ணகி (47). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரவி உடல்நலக்குறைவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கண்ணகி வீட்டுவேலை செய்து வருகிறார். இவருக்கும் அழகுமுருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவருடைய மகன் கண்டித்துள்ளார். இதனால் அவர் வீட்டில் இருந்து வெளியேறி, மாயமாகிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்த லாரி டிரைவர்
*திருச்சி கீழசிந்தாமணி பகுதியில் வசித்து வந்தவர் செல்வம் (64). லாரி டிரைவர். இவருடைய மனைவி மற்றும் மகன் பிச்சாண்டார் கோவில் பகுதியில் வசித்து வருகிறார்கள். இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த செல்வம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இது யாருக்கும் தெரியவில்லை. இந்தநிலையில் அவருடைய வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்த போது செல்வம் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்க சங்கிலி திருடியவர் கைது
*திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் தீபன் (26). இவர் டெக்ரேஷன் வேலை செய்து வருகிறார் சம்பவத்தன்று இவர் வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். பின்னர் தான் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை கழற்றி அலமாறியில் வைத்து விட்டு தூங்க சென்றார். இந்த நிலையில் பாலக்கரையை சேர்ந்த ரகுராம் (20) என்பவர்செல்போனை திருடுவதற்காக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததும், அப்போது தங்கச் சங்கிலி இருப்பதை பார்த்ததும் வீட்டிற்குள் சென்று தங்க சங்கிலியை திருடி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுராமை கைது செய்து சங்கிலியை மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கொலை மிரட்டல்
*மணப்பாறை அருகே உள்ள மறவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (25). கூலி தொழிலாளியான இவர் நேற்று திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள குடமுருட்டி பாலம் அருகே ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த வீட்டின் பக்கத்து வீட்டுகாரருக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஷாஜகான் (43) என்பவர் ஏழுமலையை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த செங்கல்லால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகானை கைது செய்தனர்.
மொபட் திருட்டு
*துவாக்குடி பெரியார் மணியம்மை நகரை சேர்ந்தவர் ரேவதி (37). இவர் காட்டூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பெல் நிறுவன 5-வது கேட் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு சந்தைக்கு சென்றார். பின்னர் திரும்ப வந்தபோது, அதனை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பெல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி சீட்டுகள் வி்ற்றவர் கைது
*திருச்சி பாலகிருஷ்ணன் நகர் சந்திப்பு அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக கம்பரசம்பேட்டை காவேரி நகரை சேர்ந்த சிவக்குமார் (60) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கேரள லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் 10 மற்றும் லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.120 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சிறுவன் கைது
*திருச்சி பாலக்கரை தெற்கு யாதவ தெருவில் ஒரு வக்கீல் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து செம்பு குழாயை திருடியதாக 17 வயது சிறுவனை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
*புத்தாநத்தத்தை அடுத்த காவல்காரன்பட்டி பிரிவு சாலை அருகே கஞ்சா விற்றதாக கார்வாடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (21), அழகர்சாமி (20) ஆகிய 2 பேரை புத்தாநத்தம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 15 கிராம் எடையுள்ள 2 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.