உரிமம் பெறாத இடத்தில் பட்டாசு தயாரித்தால் குற்றவியல் நடவடிக்கை


உரிமம் பெறாத இடத்தில் பட்டாசு தயாரித்தால் குற்றவியல் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் உரிமம் பெறாத இடத்தில் பட்டாசு, அதிர்வேட்டு தயாரித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உரிமம் பெறாத இடத்தில் பட்டாசு, அதிர்வேட்டு தயாரித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனை செய்யும் போது மற்றும் தயாரிக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய அரசு வழிகாட்டி நடைமுறைகள் மற்றும் பின்பற்றப் படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பட்டாசு விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை பட்டாசு விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

அவசர காலத்தில்...

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசு கடை தவிர தற்காலிக கொட்டகை அல்லது விரிவாக்கப்பட்ட கொட்டகைகள் எதற்கும் அனுமதியில்லை. உரிமம் வழங்கப்பட்ட இடத்தை வேறு எந்த நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடக்கூடாது.

அவசர காலங்களில் வெளியேறும் வாசல் காற்றோட்டமாக உள்ளதாக இருக்க வேண்டும். அலங்கார விளக்குகள், தொங்கு விளக்குகள், கடைகளின் மேல் அல்லது கட்டிடங்களில் நுகர்வோர்களை கவர்வதற்காக வைக்கப்படும் நிகழ்வுகளில் தீப்பொறி பற்றி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அவற்றினை விற்னையாளர்கள் தவிர்த்திட வேண்டும்.

குற்றவியல் நடவடிக்கை

பட்டாசு பொருட்கள் இருப்பு பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வண்ண தீப்பெட்டிகள், மத்தாப்புகள், பொட்டு பட்டாசுகள் தனியாக போதிய இடைவெளியில் வைக்கப்பட வேண்டும். ரசாயன பொருட்கள், பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் எதுவும் பட்டாசு விற்பனை கடையில் இருப்பு வைக்கவோ விற்பனை செய்யவோ கூடாது.

பட்டாசு, அதிர்வேட்டு போன்ற வெடிபொருட்களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக்கூடாது. அவ்வாறு தயார் செய்வது கண்டறியப்பட்டால் வெடி பொருள் சட்ட விதிகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையில் கீழ் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. சீன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story