பாசி படர்ந்து கருகி வரும் பயிர்கள்


பாசி படர்ந்து கருகி வரும் பயிர்கள்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரின் தன்மை மாறியதால் பாசிப்படர்ந்து நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இந்த பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை

கருகி வரும் நெற்பயிர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை 22 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்றுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை அருகே பொன்னூர், கட்டளச்சேரி, பாண்டூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறியதால் பச்சைப்பாசி படர்ந்து பயிர்கள் கருகி வருகின்றன. இது போன்று 250-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

வேளாண்மை துறையினர் ஆய்வு

இதை தொடர்ந்து பொன்னூர் கிராமத்தில் அகோரம் என்ற விவசாயியின் நிலத்தில் நெற்பயிரில் பச்சைப்பாசியினால் ஏற்பட்ட பாதிப்புகளை கனிம வளத்துறை இயக்குனர் சங்கரலிங்கம் தலைமையில், வேளாண்மை இணை இயக்குனர் ஜெ.சேகர், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் பேராசிரியர் ராஜப்பன், உழவியல் துறை இணை பேராசிரியர் நாகேஸ்வரி, மண்ணியல் துறை உதவி பேராசிரியர் மணிகண்டன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து,ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் பேராசிரியர் ராஜப்பன் கூறுகையில், ஒருசில சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் 1 மாத வயதுடைய நெற்பயிரின் வளர்ச்சி குன்றியும், சில இடங்களில் காய்ந்த நிலையிலும் காணப்பட்டது.

டி.ஏ.பி. உரம்

இப்பகுதிகளில் தொடர்ந்து டி.ஏ.பி. உரத்தை அடி உரமாக பயன்படுத்துவதாலும் மற்றும் இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நெல் பயிரிடுவதாலும் ஆழ்துளை கிணறுகளின் மூலம் நீர்ப்பாய்ச்சுவதாலும் பச்சை பாசிகள் வளர்ந்து நெற்பயிரின் வளர்ச்சியை பாதிக்கின்றன.

இதனைக் கட்டுப்படுத்த பச்சைப்பாசிகள் படர்ந்துள்ள வயலில் நீர்ப்பாசன வாய்மடையினை அடைத்துவிட்டு ஏக்கருக்கு 2 கிலோ நன்கு தூளாக்கப்பட்ட காப்பர் சல்பேட் உப்பை (மயில் துத்தம்) 20 கிலோ ஆற்று மணலுடன் கலந்து 1 அங்குலம் உயரத்திற்கு நீர் உள்ள நிலையில் சீராக தூவ வேண்டும்.

பாசிகளின் வளர்ச்சியை குறைக்கலாம்

பின்பு நிலத்தில் நீர் முழுமையாக வற்றி ஒரு சில சிறு வெடிப்புகள் உருவாகும் தருணத்தில் மீண்டும் நீர்பாய்ச்சுவதன் மூலம் இப்பாசிகளின் வளர்ச்சியை குறைக்கலாம். நெல் சாகுபடி செய்யும் வயல்களில் டி.ஏ.பி. உரங்களை தவிர்த்து அடிஉரமாக 1 ஏக்கருக்கு 32 கிலோ யூரியா, 8 கிலோ பொட்டாஷ் உரங்களை இட்டு நடவு செய்ய வேண்டும் என்றார்.இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுபாடு) ராஜராஜன், வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story