மளிகைக்கடைக்காரர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை


மளிகைக்கடைக்காரர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x

மளிகைக்கடைக்காரர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் அருகே எண்ணெய் ஆலை அதிபர் மகனை பணத்துக்காக கடத்திக்கொலை செய்த வழக்கில் மளிகைக்கடைக்காரர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

எண்ணெய் ஆலை அதிபர் மகன்

திருப்பூர் முதலிபாளையம் மானூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 25). இவர் குன்னம்பாளையத்தில் தனது தந்தைக்கு சொந்தமான எண்ணெய் ஆலையை கவனித்து வந்தார். மானூரில் மளிகை கடை வைத்து பாலகுரு (36) நடத்தி வந்தார். இவரின் சொந்த ஊர் நெல்லையாகும். அவரின் நண்பர்கள் மடத்துக்குளம் ருத்ராபாளையத்தை சேர்ந்த நாகரத்தினம் (34), ராஜா முகமது ஆவார்கள். ஆனந்த் அடிக்கடி பாலகுருவின் கடைக்கு வந்து சென்றதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. ஆனந்த்திடம் அதிக பணம் இருந்ததால் அவரிடம் இருந்து பணம் பறிக்க பாலகுரு, ராஜா முகமது, நாகரத்தினம் ஆகியோர் திட்டம் தீட்டினார்கள். இதற்காக ஆனந்த்தை கடத்தி கடத்திச்சென்று பணம் பறிக்க முடிவு செய்தனர்.

கடந்த 4-10-2018 அன்று மாலை ஆனந்த், ஈரோடு சென்று தொழில் நிமித்தமாக ஒருவரிடம் பணம் வாங்கி வரலாம் என்று பாலகுருவிடம் கூறினார். ஆனால் பாலகுரு ஏற்கனவே திட்டமிட்டபடி தனது நண்பர்களான ராஜாமுகமது, நாகரத்தினம் ஆகியோருடன் சேர்ந்து ஆனந்த்தை கடத்த தயாராக இருந்தார். ஆனந்த் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றபோது, காரில் வந்த பாலகுரு, ராஜாமுகமது மற்றும் நாகரத்தினம் ஆகியோர் சேர்ந்து ஆனந்த்தை தாக்கி காரில் ஏற்றினார்கள்.

கடத்திக்கொலை

ஆனந்த்தின் முகம் மற்றும் வாயை பிளாஸ்டிக் டேப்பால் சுற்றி ஓட்டினார்கள். கை, கால்களையும் கட்டினார்கள். கட்டையால் தாக்கியதில் ஆனந்த்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் சேர்ந்து ஆனந்த்தை காரில் கடத்தி வந்து, பாலகுருவின் வீட்டு அறையில் பூட்டி வைத்தனர். ரூ.50 லட்சத்தை ஆனந்தின் வீட்டாரிடம் இருந்து பறிக்கலாம் என்று திட்டமிட்டனர். இந்தநிலையில் ஆனந்த் சத்தம் போட்டதால் தங்களை வெளியே காட்டிக்கொடுத்துவிடுவார் என்று நினைத்து கயிற்றால் கழுத்தை நெரித்து ஆனந்த்தை கொலை செய்தனர்.

இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுரு, நாகரத்தினத்தை கைது செய்தனர். ராஜாமுகமது தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

ஆயுள் தண்டனை

தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட பாலகுரு மற்றும் நாகரத்தினம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், ஆள் கடத்தல் குற்றத்துக்காக 1 வருடம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், தடயத்தை அழித்த குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீ்ர்ப்பு கூறினார். இந்த தண்டனையை இதை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.



Next Story