தொடர் விடுமுறையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


தொடர் விடுமுறையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x

தொடர் விடுமுறையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான வாகனங்கள் திரண்டதால் கோவில் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவில்

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் சனி முதல் திங்கட்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால் ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

பக்தர்கள் கூட்டம்

இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். அதே போல் ரூ.100 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மலைக்கோவில் அடிவாரத்தில் அளவுக்கு அதிகமான பக்தர்களின் வாகனங்கள் வருகையால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்பட்டது.

கடும் போக்குவரத்து நெரிசல்

இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிபட்டனர். இதனையடுத்து கோவில் நிர்வாகம் போக்குவரத்து நெரிசலை தடுக்க பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களை மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. பக்தர்கள் அனைவரும் கோவில் பேருந்துகள் மூலமாகவும், ஆட்டோக்கள் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர். மலைக்கோவிலுக்கு சென்றுவர ஒருவழி பாதை மட்டும் உள்ளதாகவும் மாற்று வழி பாதை இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.


Next Story