சென்னை கடற்கரை - தி.மலை இடையேயான மின்சார ரெயிலில் அலைமோதும் பயணிகள் கூட்டம் - கூடுதல் சேவை இயக்க கோரிக்கை


சென்னை கடற்கரை - தி.மலை இடையேயான மின்சார ரெயிலில் அலைமோதும் பயணிகள் கூட்டம் - கூடுதல் சேவை இயக்க கோரிக்கை
x

சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மெண்டுக்கு தினசரி விரைவு மின்சார ரெயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.

மறுமார்க்கமாக சென்னைக் கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் சென்றடையும். வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து இந்த ரெயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2-ந் தேதி முதல் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரெயில் நிலையத்துக்கு 9.35 மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து பெண்ணத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12.05 மணிக்கு செல்லும்.

மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், அதே வழித்தடத்தில் வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வந்து சேரும். இதையடுத்து காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு வந்தடையும். 12 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரெயிலில் சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை செல்ல கட்டணம் ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டணத்தை விட குறைவாக உள்ளதால், இந்த ரெயிலில் பயணம் செய்ய அதிக அளவு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லக்கூடியவர்கள் இந்த மின்சார ரெயில் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளதால் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

எனவே கழிவறை வசதியுடன் கூடிய ரெயில் வசதி வேண்டும் எனவும், ரெயிலானது விரைவாக செல்லும் வகையில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் எனவும் ரெயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story