சேலம் கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்


சேலம் கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2023 7:30 PM GMT (Updated: 14 Jan 2023 7:30 PM GMT)

பொங்கல் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு சேலம் கடைவீதியில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

சேலம்

பொங்கல் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு சேலம் கடைவீதியில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக பொங்கல் பொருட்கள் வாங்குவற்காக சேலம் கடைவீதியில் குவிந்த வண்ணமாக இருந்தனர். இதன் காரணமாக சேலத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.

சேலம் பழைய பஸ்நிலையம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், கடைவீதி, அம்மாப்பேட்டை, நெத்திமேடு உள்பட பல்வேறு இடங்களில் கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வீடுகளுக்கு வாங்கி சென்றனர். ஒரு ஜோடி கரும்பு ரூ.80 முதல் ரூ.100 வரைக்கும், மஞ்சள் குலை ரூ.30 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனையானது.

கடைவீதியில் கூட்டம்

சேலம் கடைவீதியில் நேற்று பொங்கல் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. கடைவீதி, அக்ரஹாரம், சின்னக்கடைவீதி, செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், சூரமங்கலம் உள்பட பகுதிகளில் கரும்பு, வாழைப்பழம், மஞ்சுள் கொத்து, காப்புக்கட்டு பூ உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றதால் அதன் விற்பனை மும்முரமாக நடந்தது.

இதுதவிர, பொங்கல் படையலுக்கான பழம், தேங்காய், பூசணிக்காய், அவரை உள்ளிட்ட பல்வேறு விதமான காய்கறிகளை வாங்குவதற்காக பொதுமக்கள் ஆற்றோர காய்கறி மார்க்கெட்டிற்கு திரண்டனர். பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக சேலம் கடைவீதியில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பானை

இதனிடையே, வீடுகளில் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொங்கல் பானை, அரிசி, வெல்லம் மற்றும் பனங்கிழங்கு ஆகியவற்றையும் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று ஆர்முடன் வாங்கினர். மேலும், பெண்கள் வீட்டு வாசலில் கோலம் பொடுவதற்காக கலர் கோலப்பொடிகளையும் வாங்கி சென்றதை காணமுடிந்தது. கடைவீதியில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல், புறநகர் பகுதியான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், எடப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

-------------------

பாக்ஸ் மேட்டர்...

ஒரு கிலோ மல்லிகை பூ

ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்றுமுன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்து 500-க்கு விற்கப்பட்டது. இது நேற்று மேலும் ரூ.500 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் குறைவாக மல்லிகை பூ வரத்து இருந்தாலும் அதை வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதேபோல் மற்ற வகை பூக்கள் விலையும் உயர்ந்தது. ஒரு கிலோ முல்லை-ரூ.3,000, ஜாதிமல்லி-ரூ.1,600, காக்கட்டான்-ரூ.1,200, சாமந்தி-ரூ.120, சம்மங்கி-ரூ.100, அரளி-ரூ.400, நந்தியாவட்டம்-ரூ.270.

---------------


Next Story