குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்; அருவிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
குற்றாலம் அருவி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த சீசனின்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கோட்டும்.
இந்த சீசனை அனுபவித்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். இந்த ஆண்டு சீசன் தாமதமாக தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.
உற்சாக குளியல்
தற்போது கடந்த மூன்று நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் வேகமும் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் மலைப்பகுதியில் சாரல் மழை அவ்வப்போது பெய்வதால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுகிறது. மெயின் அருவியில் தண்ணீர் பரவலாக விழுகிறது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலம் அருவியில் சுமாராக தண்ணீர் விழுகிறது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைேமாதியது. அவர்கள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
இதேபோல குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள படகு குழாமிலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.