சி.எஸ்.ஐ. திருமண்டல மோதல் விவகாரம்: தி.மு.க. எம்.பி. உள்பட 33 பேர் மீது வழக்கு


சி.எஸ்.ஐ. திருமண்டல மோதல் விவகாரம்: தி.மு.க. எம்.பி. உள்பட 33 பேர் மீது வழக்கு
x

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல மோதல் விவகாரத்தில் மதபோதகரை தாக்கிய புகாரின் பேரில் தி.மு.க. எம்.பி. உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பிஷப் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் ஜெயசிங் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 'லே' செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயசிங் அணியினரின் ஏற்பாட்டில் நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பிஷப்பாக பர்னபாஸ் என்பவர் தேர்வு செய்து நியமிக்கப்பட்டார்.

திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணி நியமனம் செய்வது தொடர்பாக பிஷப் பர்னபாசுக்கும், 'லே' செயலாளர் ஜெயசிங் நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 அணியாக பிரிந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் உள்ள டயோசீசன் அலுவலகத்தில் இருந்த ஒரு அறைக்கு பூட்டு போட்டது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையே, பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராக இருந்த நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. எம்.பி.யான ஞானதிரவியத்தை தாளாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் அருள் மாணிக்கம் என்பவரை புதிய தாளாளராக பிஷப் பர்னபாஸ் நியமித்தார். இதனால் அந்த பள்ளி வளாகத்திலும் 2 தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

நேற்று முன்தினம் பிஷப் பர்னபாஸ் ஆதரவு பெற்ற பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் சபை நடத்தி வரும் மதபோதகரான காட்பிரே நோபுள் என்பவர் பாளையங்கோட்டை வடக்கு ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்தவர்களுக்கும், காட்பிரே நோபுளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சிலர் காட்பிரே நோபுளை சரமாரியாக அடித்து, உதைத்தனர். இந்த தாக்குதல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காட்பிரே நோபுள் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் ஞானதிரவியம் எம்.பி. தூண்டுதலின் பேரில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்படி, பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம், மதபோதகரை தாக்கிய புகாரின்பேரின் ஞானதிரவியம் எம்.பி., 'லே' செயலாளர் ஜெயசிங், பெருமாள்புரத்தை சேர்ந்த ஜான் (வயது 45), திருமண்டல நிர்வாகி மனோகர் உள்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 294(பி), 323, 506(1), 109 ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஜான் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


Next Story