ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு குவா குவா
ஒடுகத்தூர் அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அணைக்கட்டு தாலுகா, கீழ்கொத்தூர் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மணைவி காவியா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காவியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக 108 ஆம்புலன்சை அழைத்தனர். அதன்பேரில் அணைக்கட்டில் இருந்து வந்த ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் செல்வி, டிரைவர் வினோத் குமார் ஆகியோர் காவியாவை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
கீழ்கொத்தூர் அருகே மலைப்பாதையில் செல்லும் போது காவியாவிற்கு வலி அதிகரித்தது. உடனடியாக ஆம்புலன்சை நிறுத்தி மருத்துவ உதவியாளர் செல்வி பிரசவம் பார்த்தார். அதில் காவியாவிற்கு நள்ளிரவு 12.20 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் பத்திரமாக ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.