தூத்துக்குடி அருகே வெள்ளரிக்காய் விளைச்சல் அமோகம்


தூத்துக்குடி அருகே வெள்ளரிக்காய் விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:46 PM GMT)

தூத்துக்குடி அருகே வெள்ளரிக்காய் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிளையூரணி கிராமத்தில் விவசாயிகள் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மானாவாரியாக வெள்ளரி, பீர்க்கங்காய் ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனர். சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அவற்றை பயிரிடும் அவர்கள், இதற்காக புரட்டாசி மாதத்தில் விதைகளை விதைக்கின்றனர். அவை நன்றாக வளர்ந்து காய்கள் காய்த்து கார்த்திகை மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழையை நம்பி புரட்டாசி மாதம் வெள்ளரி, பீர்க்கங்காய் விதைகளை விவசாயிகள் விதைத்தனர். மானாவாரி பயிர்களுக்கு ஏற்ற வகையில் பருவமழை பெய்துள்ளதால் அவை நன்றாக வளர்ந்து காய்கள் காய்த்து தற்போது அறுவடை நடந்து வருகிறது.

தற்போது விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து மாப்பிளையூரணியை சேர்ந்த விவசாயி செண்பகவள்ளி கூறும்போது, 'நாங்கள் வெள்ளரி பயிரிட்டு உள்ளோம். புரட்டாசி மாதத்தில் விதைப்பு செய்தோம். 40 நாளில் கொடி வளர்ந்து நல்ல விளைச்சலை தந்து உள்ளது. எங்களிடம் தோட்டத்துக்கு வந்து வியாபாரிகள் வெள்ளரி, பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றை வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.20 முதல் ரூ.40 வரை விலை போகிறது. 60 நாட்கள் வரை நல்ல வருமானம் கிடைக்கும். அதன்பிறகு குறைந்து விடும். ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. இந்த பகுதியில் விளையும் வெள்ளரிக்காய் நல்ல சுவையாக இருக்கும் என்பதால் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு ஓரளவுக்கு நல்ல மகசூல் வந்து உள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதி வரை பெய்தால், தை மாதம் கடைசி வரை விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.


Next Story