கடலூர் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.20½ லட்சம் மோசடி


கடலூர் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.20½ லட்சம் மோசடி
x

மகனை குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறி, கடலூர் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.20½ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்


கடலூர் உண்ணாமலைசெட்டிச்சாவடி விசாலிநகரை சேர்ந்தவர் பாஞ்சாலம் (வயது 59). தனியார் நிறுவன அதிகாரி. இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தனது மகன் என்ஜினீயரிங் படித்து விட்டு 2018, 2019-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு எழுதி இருந்தார்.

அப்போது காரைக்காடு கர்ணன், பரமகுரு மற்றும் டாக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் அறிமுகமானார்கள். பின்னர் அவர்கள் 3 பேரும் கடலூர் நெல்லிக்குப்பம் ரோடு சேகர் நகரில் வசித்த ஜெயபால், அவரது மனைவி சுகந்தி (54) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தனர். அவர்கள் தனது நண்பர்கள் சென்னையை சேர்ந்த டேனியல்ராஜ், ராஜா ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி.யில் (வனத்துறை உயர்அதிகாரி) அரசு வேலை வாங்கி தருவதாக கூறினர்.

ரூ.20½ லட்சம் மோசடி

இதை நம்பிய நான் அவர்களிடம் பல தவணைகளில் ரூ.20 லட்சத்து 42 ஆயிரம் கொடுத்தேன். பிறகு உங்கள் மகனுக்கு தேர்வு முடிவு வரவில்லை. இருப்பினும் உங்கள் மகனை தேர்ச்சி பெற வைத்து வேலை வாங்கி தருவோம். அதற்காக மேலும் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கூறினர்.

இதற்கிடையில் டேனியல்ராஜ் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது எனக்கு தெரிய வந்தது. இதையடுத்து சுகந்தி வீட்டுக்கு சென்று, பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவர் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆகவே ரூ.20½ லட்சம் மோசடி செய்த சுகந்தி, ஜெயபால், டேனியல்ராஜ், ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பெண் கைது

புகார் மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், அதை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், ஏட்டு ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய சுகந்தியை காஞ்சீபுரம் மாவட்டம் கானத்தூரில் போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சொந்த ஊர் கோதண்டராமபுரம் கரைமேடு பகுதி என்றும், அவர் பணத்தை மோசடி செய்ததையும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து சுகந்தியை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் 2 மோசடி வழக்கு, சென்னையில் ஒரு மோசடி வழக்கு, வேலூர் மாவட்டம் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் ஒரு மோசடி வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயபால், டேனியல்ராஜ், ராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story