கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்
கீரமங்கலத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் வெட்டி செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கஜா புயல்
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. புயலின் தாக்கத்தால் ஏராளமான தென்னை, மா, பலா, தேக்கு, வேம்பு, புளி, ஆலமரம், அரசமரங்கள் என அனைத்து மரங்களும் வேரோடு சாய்ந்தன.
நூற்றாண்டு பழமைவாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். சில நாட்களுக்கு பிறகு தங்கள் தோட்டங்களில் சாய்ந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றினார்கள்.
வெட்டப்படும் தென்னை மரங்கள்
வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை அகற்றிய விவசாயிகள் சாயாமல் நின்ற மரங்களுக்கு உரம், நூண்ணூட்டம் வைத்தால் மீண்டும் காய்க்கும் என்ற நம்பிக்கையில் அதனை பராமரித்தனர். ஆனால் 4 ஆண்டுகளாகியும் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் பலன் தரவில்லை என்பதால் இனிமேலும் செலவு செய்து பராமரிப்பது தேவையற்றது என கருதிய விவசாயிகள் காய்ப்பு இல்லாத தென்னை மரங்களை செங்கல் சூளைகளுக்கு விறகுகளாகவும், கட்டுமான பணிக்கு பலகைகளுக்காகவும் விற்று வருகின்றனர்.
இதனால் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பலன் தராத தென்னை மரங்கள் வெட்டி செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.