கொத்தனார் அரிவாளால் வெட்டிக் கொலை
கரூர் அருகே கொத்தனார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொத்தனார்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கல்லடை தெற்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35). கொத்தனார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன்ராஜ் தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி உள்ளார். நள்ளிரவு நேரத்தில் மோகன்ராஜின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.
வீட்டில் இருந்து சென்றார்
இதையடுத்து மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டார். அப்போது மோகன்ராஜின் மனைவி கோமதி இந்த நேரத்தில் எங்கு செல்கிறாய் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர் தனது நண்பனின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லாமல் கீழவெளியூர் பகுதியில் நிற்பதாகவும், அதனால் நண்பனை பார்ப்பதற்கு செல்வதாகவும் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் மோகன்ராஜ் வீட்டிற்கு வரவில்லை.
கொலை
இதனால் அதிர்ச்சி அடைந்த கோமதி தனது உறவினர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் மோகன்ராஜை தேடி வந்தார். இதற்கிடையில் திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் பெரியகளத்துப்பட்டி வளைவு பகுதியில் மோகன்ராஜ் அரிவாள் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோமதி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மோகன்ராஜியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
3 பேரிடம் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மோகன்ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து கோமதி தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் திருச்சி மற்றும் நச்சலூர் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.