நாகையில், 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


நாகையில், 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x

நாகையில் 5- ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதை தொடர்ந்து எச்சரிக்கை விளக்குகள் ஒளிரவிடப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

தினத்தந்தி 8 Dec 2022 7:15 PM GMT (Updated: 8 Dec 2022 7:16 PM GMT)

வங்க கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் காரணமாக நாகையில் நேற்று 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

நாகப்பட்டினம்

வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் காரணமாக நாகையில் நேற்று 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது ஓரளவு மழை பெய்தது. கடந்த மாதம்(நவம்பர்) பிற்பாதியில் இருந்து மழை குறைந்தது.

சில இடங்களில் மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையும், பனிப் பொழிவுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

இது வலுவடைந்து புயலாக மாறும் என்றும், அதனால் தமிழகத்துக்கு ஓரளவு மழை இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்றுமுன்தினம் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

தொடர்ந்து தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாக கடந்த 6-ந் தேதி நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

'மாண்டஸ்' புயல் கரையை நோக்கி நெருங்கி வரும் சூழலில், புயல் தூரத்தில் உருவாகி இருப்பதை குறிக்கும் வகையில் நேற்று காலை அங்கு 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

காற்றுடன் மழை

நாகையில் நேற்று மதியத்துக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது. காற்றும் சற்று வேகமாக வீசியதால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இது தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று மாலை 6.45 மணி அளவில், 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் அங்கு இரவு நேரத்தில் புயல் எச்சரிக்கையை உணர்த்தும் விதமாக வெள்ளை, சிவப்பு நிற எச்சரிக்கை விளக்குகளும் ஒளிரவிடப்பட்டுள்ளன.

கடுமையான வானிலை

துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பது 5-ம் எண் புயல் கூண்டுக்குரிய விளக்கமாகும் என துறைமுக அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story