டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -கலெக்டர் அறிவுரை
டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பேரையூர்
டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கலெக்டர் ஆய்வு
டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அனிஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குன்னத்தூரில் மகளிர் சுய உதவி திட்ட கட்டிடம் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும், மேலும் அங்கு பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் எந்திர செயல்பாட்டினையும் பார்வையிட்டார்.
டி.கல்லுப்பட்டியில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சியாளர்கள் தங்கும் விடுதியையும், நல்லமரம் ஊராட்சியில் கதிரடிக்கும் களத்தையும், காடனேரி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளையும் கலெக்டர் அனிஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விரைந்து முடிக்க வேண்டும்
டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் அம்ரூத் திட்டத்தில் நடைபெற்று வரும் பூங்கா பணிகளையும் பார்வையிட்டார்.
பேரையூர் பேரூராட்சியில், சுப்பிரமணியசாமி கோவில் சாலையில் உள்ள அடர்காடு முறையில் அமைக்கப்பட்ட மரங்களையும், திருமால் நகரில் அம்ரூத் திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளையும், வளம்மீட்பு பூங்காவில் நடைபெறும் உரம் தயாரிக்கும் பணி, மேற்கூரை அமைக்கும் பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆசிக், சிவசங்கர நாராயணன், மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலக செயல் அலுவலர் (கணக்குகள்) கண்ணன், பேரூராட்சி தலைவர்கள் குருசாமி, முத்துகணேசன், செயல் அலுவலர்கள் ஜெயதாரா, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.