தேர்தல் களத்தில் தினசரி உற்சாகம்:எம்.ஜி.ஆர். வேடத்தில் வந்து ஓட்டு கேட்கும் அ.தி.மு.க.;கரகாட்டம் ஆடியும் வாக்கு சேகரிப்பு


தேர்தல் களத்தில் தினசரி உற்சாகம்:எம்.ஜி.ஆர். வேடத்தில் வந்து ஓட்டு கேட்கும் அ.தி.மு.க.;கரகாட்டம் ஆடியும் வாக்கு சேகரிப்பு
x

தேர்தல் களத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் வந்து ஓட்டு கேட்கும் அ.தி.மு.க கரகாட்டம் ஆடியும் வாக்கு சேகரிக்கின்றனா்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒருபக்கம் தி.மு.க. அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் ஈரோட்டில் முகாம் அமைத்து பொதுமக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

இதுபோல் அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோட்டில் தங்கி இருந்து தங்கள் மாவட்ட தொண்டர்களுடன் வந்து பிரசாரம் செய்து வருகிறார்கள். நேற்று ஈரோடு எஸ்.கே.சி. ரோடு பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஓட்டு கேட்டு வீதி வீதியாக நடந்து சென்றார். அப்போது அவருடன் எம்.ஜி.ஆர். வேடம் அணிந்த தொண்டர் ஒருவரும் வந்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

வேட்பாளர் வரும்போது பெண்கள் பலர் சாலையோரத்தில் நின்று அவர் மீது பூக்கள் சொரிந்து வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேட்பாளர் வருவதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர். வேடமிட்டு வந்தவரை பார்த்ததும் பெண்கள் அவர் மீது பூக்களை சொரிந்தனர். அவரும் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் இருகரம் கூப்பி வாக்கு கேட்டு நடந்தார். எம்.ஜி.ஆர். மறைந்து ஆண்டுகள் பல கடந்தாலும் அவர் போன்று வேடமிட்டு நடந்து வந்தவருக்கே மக்கள் அளிக்கும் மரியாதையை பார்த்து அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

இதுபோல் தொழிலாளர்களை கவரும் வகையில் கரகாட்டக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் தேர்தல் பிரசாரத்தின் போது நடத்தப்படுகிறது. கரகாட்ட குழுவினருடன் உற்சாக மிகுதியால் ஓட்டு கேட்க செல்லும் அ.தி.மு.க.வினரும் சேர்ந்து ஆடுகிறார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. என ஓட்டுகேட்டு செல்லும் கட்சிகள் பொதுமக்களை கவர செய்யும் யுக்திகள் தேர்தல் களத்தை உற்சாகப்படுத்தி உள்ளன.


Next Story