லண்டன்- சென்னை இடையே 3 ஆண்டுகளுக்கு பின் தினசரி விமான சேவை...!


லண்டன்- சென்னை இடையே 3 ஆண்டுகளுக்கு பின் தினசரி விமான சேவை...!
x

லண்டன்- சென்னை இடையே 3 ஆண்டுகளுக்கு பின் தினசரி பயணிகள் விமான சேவை தொடங்க உள்ளது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் கொரோனா தொற்று காரானமாக கடந்த 3 ஆண்டுகளாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமானம் என்பதால் இந்த விமானத்தில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த விமானத்தில் டிக்கெட் கிடைக்க பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.

சென்னையில் இருந்து லண்டனில் உள்ள ஹியாத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் பிரிட்டீஷ் ஏா்வேஸ் விமானம் பாரிஸ், ஸ்காட்லாந்து, ரோம், வாஷிங்டன், நியூயார்க், சிக்காகோ, செயின்ட் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இணைப்பு விமானமாக செயல்பட்டு வருகிறது. எனவே பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இந்த விமானத்தை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி திங்கள்கிழமை முதல் வாரத்தில் ஏழு நாட்களும் விமானம் சேவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லண்டனில் உள்ள ஹியாத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் அதிகாலை 3:30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை வந்து சேரும். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 5:31 மணிக்கு லண்டனிற்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விமானத்தில் சுமாா் 13 மணி நேரம் பயணமாகும்.

இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் வரவேற்பையும் பெற்று உள்ளது. லண்டனுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் விமானங்கள் சென்னையில் இருந்து இயக்கப்படுவதால் சென்னைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரிக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story