தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பொதுஇடத்தில் மது அருந்தும் மதுப்பிரியர்கள்
பெரம்பலூர் நகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், வணிக வளாகம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மதுப்பிரியர்கள் இரவு நேரத்தில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் அவர்கள் காலி மதுபாட்டில்களை சாலையில் உடைத்துவிட்டு செல்பவதுடன் சாலையோரத்திலேயே படுத்து தூங்குகின்றனர். இதனால் பெண்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், துவரங்குறிச்சி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மோரனிமலை அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அதன் தூண்கள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் அமர்ந்து வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தினர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
சரவணன், துவரங்குறிச்சி, திருச்சி.
பிளாஸ்டிக் கழிவுகளால் காய்ச்சல் பரவும் அபாயம்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் உபயோகமற்ற பிளாஸ்டிக் கழிவுகளை தார் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை கொசுக்கள் கடிப்பதினால் டெங்கு, மலேரியா மற்றும் பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நடராஜன், மண்மங்கலம், கரூர்.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, வலையபட்டி பாப்பா ஆச்சி அரசு மருத்துவமனை சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கபடாமல் சிதிலமடைந்து உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமரகண்டான் வடகரை வழியாக வலையபட்டி சாலையை இணைக்கும் சாலையும் பல ஆண்டுகளாக புதுபிக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வலையபட்டி, புதுக்கோட்டை.