தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குரங்குகள் தொல்லை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், ஆண்டிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட நடுத்தோப்பு தெரு, தில்லை நகர் மற்றும் செல்லந்தெரு ஆகிய பகுதிகளில் குரங்குகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை இப்பகுதியில் உள்ள சிறுவர்களை கடிக்க வருவதுடன் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் மளிகை பொருட்கள், தின்பண்டங்கள், காய்கறிகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச்சென்றுவிடுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள கடைகளில் புகுந்து பொருட்களை எடுத்துச்செல்வதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வீட்டிற்குள் புகும் குரங்குகளை விரட்ட முயன்றால் அவை கடிக்க வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஜெய்கணேஷ், ஆண்டிமடம், அரியலூர்.

புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் துர்நாற்றம்

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் சிறுநீர் கழிப்பிடம் அருகே பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக பயணிகள், பொதுமக்கள் கடந்து செல்ல முடியவில்லை. சரியாக தூய்மை பணி மேற்கொள்ளாததால் இந்தநிலை காணப்படுவதாக கூறப்படுகிறது. பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் உள்ளே நுழையும் இடத்தின் அருகே சிறுநீர் கழிப்பிடம் அமைந்திருப்பதால் பெரும் அவதியாக உள்ளது. பஸ் நிலையத்தின் மறுபக்கம் ஆயுதப்படை மைாதனம் செல்லக்கூடிய சாலையிலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை தவிர்க்க தூய்மை பணிகளை மேற்கொள்வதோடு, சுகாதார தெளிப்பான்களை தெளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.

தூர்வாரப்படாத புகழூர் வாய்க்கால்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள ஒரம்புப்பாளையம் பகுதியிலிருந்து கவுண்டன்புதூர், சேமங்கிசெல்வநகர் வழியாக முத்தனூர் வரை விவசாய நிலங்களில் பாய்ச்சப்படும் தண்ணீர் வெளியேறி செல்லும் வகையில் உபரிநீர் கால்வாய் வெட்டப்பட்டது. அந்த கால்வாய் மூலம் உபரி நீர் சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது செடி, கொடிகள், சம்புகள் முளைத்து கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஒரம்புப்பாளையம், கரூர்.


Next Story