தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மார்க்கெட் தெருவில் பேருந்து நிலையம், நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கோட்டாட்சி தலைவர் அலுவகம், அரசு மேல்நிலைப்பள்ளி, கால்நடைத்துறை, மாவட்ட நூலகம் மற்றும் பல அலுவலகங்கள் உள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை கழிவுநீர் வாய்க்கால் மீது தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது பலகை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். தற்பொழுது சாலையில் பாதி அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அரசு அலுவலகங்களுக்கு வாகனத்தில் வருபவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் மார்க்கெட் தெருவின் சாலை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு எந்த வித வாகனமும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மார்க்கெட், அரியலூர்

அங்கன்வாடி மையம் சீர் செய்யப்படுமா?

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வாணதிரையன் பட்டணம் கிராமத்தில் நூலகமாக செயல்பட்டு வந்த கட்டிடம் தற்பொழுது புது வாழ்வு திட்டத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது அந்த கட்டடிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தில் ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கட்டிடத்தை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வாணதிரையான் பட்டணம்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, வரதராஜன்பேட்டை புதுத்தெருவை இணைக்கும் கவரப்பாளையம் - தென்னூர் இடையே மூன்று வழி சாலை வளைவில் தினமும் காலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த மூன்று வழி சாலையில் வேகத்தடை அமைத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆண்டிமடம்.


Next Story