தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

பஸ் வசதி வேண்டும்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கோட்டியால் கிராமத்தில் இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து மாணவ-மாணவிகள் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஆனால் இந்த கிராமத்தில் முறையான பஸ் வசதி இல்லை. இதனால் இங்குள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளை 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தா.பழூரில் கொண்டு சென்று விட்டு வருகின்றனர். அங்கிருந்து மாணவர்கள் பஸ் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். எனவே கோட்டியால் கிராமத்திற்கு சுத்தமல்லி மற்றும் தா.பழூர் வழியாக டவுன்பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கோட்டியால்.

விளம்பர பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள மேம்பாலத்தின் வழியாக அரியலூர் முத்துவாஞ்சேரி செல்லும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் வி.கைகாட்டி மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையை ஒட்டி உள்ள சுவற்றில் பல்வேறு வகையான விளம்பர பாதாகைகள் ஒட்டப்பட்டுள்ளது. சில நேரங்களில் விளம்பர பதாகைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழும் சூழல் உள்ளது. மேலும் சாலையோரங்களில் நின்று கொண்டு கால்நடைகள் பதாகைகளை தின்று விடுகிறது. இதனால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

நிழற்குடைக்குள் புகும் மழைநீர்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் உஞ்சினி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இப்பகுதியில் தொடர் மழை பெய்தால் பயணிகள் நிழற்குடையின் உள்பகுதியில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடைக்குள் மழைநீர் புகாத வண்ணம் உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், உஞ்சினி

குப்பை மேடாக மாறிவரும் சுடுகாடு

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இரும்புலிக்குறிச்சியில் சிறுகடம்பூர் சாலையில் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல்களில் வீணான உணவு அதிகளவில் கொட்டி வருகின்றனர். இதனால் சுடுகாடு குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், இரும்புலிக்குறிச்சி.


Next Story