'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. 'ஏ' காலனி வனத்துறை அலுவலகம் முன்புள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, வேகத்தடையில் வெள்ளைநிற வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
-ஆறுமுகம், பாளையங்கோட்டை.
சேதமடைந்த சாலை
பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-மகேசுவரன், தோணித்துறை.
சாலையின் நடுவில் ராட்சத பள்ளம்
நெல்லையை அடுத்த பேட்டை பவுண்டு தெருவில் சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. அங்குள்ள பள்ளிக்கூடத்துக்கு இந்த வழியாகத்தான் ஏராளமான மாணவ-மாணவிகள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் சென்று வருகின்றனர். இதனால் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-சாமிநாதன், பேட்டை.
ஆபத்தான மின்கம்பங்கள்
நெல்லை மேலப்பாளையம் 34-வது வார்டு அக்பர் தெருவில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும், அந்த மின்கம்பங்களில் இருந்து ஏராளமான மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. எனவே, ஆபத்தான மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-காஜா மைதீன் பாதுஷா, மேலப்பாளையம்.
சேறும் சகதியுமான சாலை
மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு தெற்கு தெரு, நாடார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்குவதால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு சாலை, வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-இசக்கி, பருத்திப்பாடு.
தெருநாய்கள் தொல்லை
பாளையங்கோட்டை 34-வது வார்டு ஜான்ஸ் கல்லூரி ரோடு, பரஞ்சுடர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிப்பதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ரிபாய், பாளையங்கோட்டை.
நிறுத்தப்பட்ட பஸ்சால் மாணவர்கள் அவதி
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இருந்து காலை 8.10 மணிக்கு நெல்லைக்கு புறப்பட்டு செல்லும் அரசு பஸ் (வழித்தட எண்:- 136 பி) கடந்த சில நாட்களாக சரிவர இயக்கப்படவில்லை. இதனால் நெல்லையில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அரசு பஸ்சை தினமும் முறையாக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-கொடியரசி, ஆவரையூர்.
சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
திருச்செந்தூர் வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி சந்திக்கும் சாலையில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மீது கழிவுநீர் தெறிக்கின்றன. எனவே, அங்கு சுகாதாரக்கேட்டை போக்கிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.
மூடப்பட்ட ஏ.டி.எம். மையத்தால் மக்கள் அவதி
உடன்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, வங்கி ஏ.டி.எம். மையம் மீண்டும் செயல்படுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-ஸ்ரீராம், உடன்குடி.
இருளில் மூழ்கிய மேம்பாலம்
கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே மேம்பாலத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்த மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-முருகன், கோவில்பட்டி.
குண்டும் குழியுமான சாலை
சாத்தான்குளம் அருகே செட்டிகுளம் அம்மன் கோவில் தெரு, மேல தெரு, பெருமாள் கோவில் தெரு, துணை சுகாதார நிலையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-முருகன், செட்டிகுளம்.
அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்படுமா?
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள பெரும்பாலான கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடங்கள் கட்டவும், ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-முனியசாமி, கடையநல்லூர்.
சாலையோரம் சரிந்த நிலையில் மின்கம்பம்
சுரண்டை அருகே வாடியூரில் இருந்து கரையாளனூர் செல்லும் சாலையோரம் உள்ள இரும்பு மின்கம்பம் சரிந்த நிலையில், எந்த நேரத்திலும் சாலையில் விழும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-சுப்பிரமணியன், வாடியூர்.
* திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி பஞ்சாயத்து முத்துலட்சுமிபட்டிக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சரிந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ராமச்சந்திரன், கலிங்கப்பட்டி.
வேகத்தடை தேவை
சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள சண்முகாநகர் பகுதியில் பள்ளிக்கூடம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சாலையில் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ராஜலட்சுமி, சங்கரன்கோவில்.
சாலையோரம் காய்ந்த மரங்களால் விபத்து அபாயம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கு அருகில் சாலையோரம் உள்ள 2 பனை மரங்கள் பட்டுப்போய் காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் அருகில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. பலத்த காற்றில் காய்ந்த மரங்கள் சரிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காய்ந்த மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-மாடசாமி, சுப்பிரமணியபுரம்.