'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் தெற்கு முத்தாரம்மன் கோவில் தெரு வழிகாட்டி பலகை அருகில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதாக மாரிமுத்து என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தியாக பிரசுரமானது. இதையடுத்து அங்கு குப்பைத்தொட்டிகள் வைத்து குப்பைகள் தினமும் அகற்றப்படுகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி பஞ்சாயத்து நெசவாளர் காலனியில கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் போதிய குடிநீர் கிடைக்க பெறாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-முத்து, கல்லிடைக்குறிச்சி.

* தெற்கு வீரவநல்லூர் பாரதிநகர் பொத்தை பகுதியில் வாரத்துக்கு ஒரு முறை மட்டும் குறைந்த நேரமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு தினமும் சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-கண்ணன், தெற்கு வீரவநல்லூர்.

அடிபம்பை சூழ்ந்த குப்பைகள்

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி ரோட்டில் காவலர் குடியிருப்பு பின்புறம் உள்ள அடிபம்பு கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. அதனைச் சுற்றிலும் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். எனவே பழுதடைந்த அடிபம்பை பழுது நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-முத்து, பாளையங்கோட்டை.

வேகத்தடையில் வர்ணம் தேவை

அம்பை அருகே வாகைக்குளம் விலக்கில் இருந்து வாகைக்குளம் உரக்கடை பஸ் நிறுத்தம் வரையிலும் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இதில் 3 இடங்களில் அமைக்கப்பட்ட வேகத்தடைகளில் வர்ணம் பூசாததால், இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-திருக்குமரன், கடையம்.

சுகாதாரக்கேடு

பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை 10-வது வார்டு வடக்கு தெருவில் வாறுகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைந்து உருக்குலைந்த நிலையில் உள்ளது. எனவே அங்கு வாறுகால், சாலை வசதி செய்து தருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-சாம், வண்ணார்பேட்டை.

பயணிகள் நிழற்கூடம் வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பைபாஸ் ரோட்டில் போலீஸ் நிலையம் அருகில் நின்று பயணிகள் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ் ஏறி செல்கின்றனர். அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படாததால் வெயிலிலும், மழையிலும் நின்று அவதிப்படுகின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-ஆறுமுகம், எட்டயபுரம்.

தெருநாய்கள் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-சதாம் ஹூசைன், சேதுக்குவாய்த்தான்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் சாத்தான்குளம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். பேய்க்குளத்தில் இருந்து சாத்தான்குளத்துக்கு காலையில் பள்ளி செல்லும் நேரத்தில் ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர். எனவே பேய்க்குளம்-சாத்தான்குளம் இடையே காலை, மாலையில் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டுகிறேன்.

-மகாராஜன், சாத்தான்குளம்.

சேதமடைந்த நடைமேடை

திருச்செந்தூர் சன்னதி தெருவில் பாணர் மடம் அருகில் நடைமேடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த வழியாகத்தான் திருச்செந்தூர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். எனவே சேதமடைந்த நடைமேடையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

வேகத்தடை அமைக்கப்படுமா?

கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பு பகுதியில் இருந்த வேகத்தடையை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி அகற்றினர். பின்னர் அங்கு மீண்டும் வேகத்தடை அமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையை சீரமைத்து மீண்டும் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-உதயராஜன், இனாம் மணியாச்சி.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கு அருகில் சாலையோரம் உயரழுத்த மின்கம்பிகளின் அருகில் 2 பனை மரங்கள் பட்டுப்போய் காய்ந்த நிலையில் உள்ளதாக மாடசாமி என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக காய்ந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

குண்டும் குழியுமான சாலை

செங்கோட்டை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. செங்கோட்டை பால்பண்ணை அருகில் சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-கனியமுதன், செங்கோட்டை.

சுகாதார வளாகம் கட்டப்படுமா?

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் கீழஆம்பூர்- பாபநாசம் மெயின் ரோட்டில் புளியமரம் அருகில் இருந்த சுகாதார வளாக கட்டிடம் (சிறுநீர் கழிப்பறை) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியினர் இயற்கை உபாதை கழிக்க இடமின்றி சிரமப்படுகின்றனர். எனவே அங்கு சுகாதார வளாகம் புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-கண்ணன், கீழஆம்பூர்.

பஸ் சேவையை நீட்டிக்க வேண்டும்

கடையம் யூனியன் மேலஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் இருந்து அம்பைக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சை (வழித்தட எண்:-20பி) பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி வரையிலும் சென்று திரும்பி வரும் வகையில் காலை, மாலையில் நீட்டித்து இயக்க வேண்டும். இதன்மூலம் அங்கு படித்து வரும் மாணவர்கள் எளிதில் கல்லூரிக்கு சென்று வர உதவியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

உருக்குலைந்த அடிபம்பு

ஆலங்குளம் அருகே காத்தபுரம் வேப்பங்குளம் மறுகால் ஓடை அருகில் உள்ள அடிபம்பு பல ஆண்டுகளாக பழுதடைந்து துருப்பிடித்து உருக்குலைந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் போதிய தண்ணீர் கிடைக்கப்பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான பழைய அடிபம்பை அகற்றி விட்டு, புதிய அடிபம்பு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-பாலசுப்பிரமணியன், காத்தபுரம்.


Next Story