'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் தொட்டியை சூழ்ந்த செடிகள்
நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் சுண்டங்குறிச்சி பஞ்சாயத்து 9-வது வார்டு பன்னீருத்து பகுதியில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக பராமரிப்பற்று சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் குடிநீர் தொட்டியை சூழ்ந்து செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே செடிகளை அகற்றி, குடிநீர் தொட்டியை புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-கொம்பையா, பன்னீருத்து.
பயணிகள் நிழற்கூடம் தேவை
ராதாபுரம் பஞ்சாயத்து பாவிரிதோட்டம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?
நெல்லை மேலப்பாளையம் ஹாஜிராநகர், அர்ச்சனாநகர், அப்துல்கலாம் நகர் உள்ளிட்ட இடங்களில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் தெருநாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே அப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கவும், தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அம்ஜத், முதலியார்பட்டி.
சாலை வசதி வேண்டும்
களக்காட்டில் இருந்து கோவிலம்மாள்புரம் வழியாக ஏர்வாடிக்கு செல்லும் சாலையில் கிழக்கு புளியங்குளம் ஊருக்கு செல்லும் சாலையானது பல ஆண்டுகளாக மண்சாலையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு தார் சாலை அமைக்க வேண்டும்.
-நம்பிராஜன், களக்காடு.
* களக்காட்டில் இருந்து பத்மனேரி பிளவுக்கல் இசக்கியம்மன் கோவில் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதுடன் விபத்துகளும் நிகழுகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-கணேசன், பத்மனேரி.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி பஞ்சாயத்து மருதகுளம் பலவேசக்காரன் கோவில் தெருவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊய்க்காட்டான், மருதகுளம்
புகாருக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வாரச்சந்தையில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை என்று முத்து என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து உயர்கோபுர மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்கின்றன. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
ஏரல் தாலுகா கச்சனாவிளை பஞ்சாயத்து நெய்விளை கிராமத்தில் புதிய சாலை அமைப்பதற்காக, பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் ஜல்லிக்கற்களை நிரப்பிய நிலையில், பணிகளை கிடப்பில் போட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
- ஐசக், நெய்விளை
குப்பைகளால் வாறுகாலில் அடைப்பு
கருங்குளம் யூனியன் வட வல்லநாடு பகுதியில் வாறுகாலில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் வாறுகாலில் அடைப்புகள் ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி சுத்தமாக பராமரிக்க வேண்டுகிறேன்.
-தம்பான், வல்லநாடு
குண்டும் குழியுமான சாலை
கோவில்பட்டி இலுப்பையூரணி மறவர் காலனி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-பாலமுருகன், கோவில்பட்டி.
சுகாதாரக்கேடு
தூத்துக்குடி தபால்தந்தி காலனி 4-வது தெருவின் பின்புறம் மழைநீர், கழிவுநீர் குளம் போன்று தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய தண்ணீரை வடியவைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
- சுந்தர்ராஜ், தூத்துக்குடி
புகாருக்கு உடனடி தீர்வு
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேல கிருஷ்ணபேரியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதாக முருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து குழாய் உடைப்பை சரி செய்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
வேகத்தடை உயரம் குறைக்கப்படுமா?
தென்காசி ஹவுசிங் போர்டு காலனி மெயின் ரோட்டில் வேகத்தடை உயரமாக அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்களின் அடிப்பகுதியில் வேகத்தடை மோதுவதால் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடையின் உயரத்தை குறைப்பதற்கும், அனுமதியின்றி வைக்கப்பட்ட வேகத்தடைகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
-அருணாசலம், தென்காசி.
கழிவுநீரால் சுகாதாரக்கேடு
சங்கரன்கோவில் களப்பாகுளம் பஞ்சாயத்து என்.ஜி.ஓ. காலனி கலைஞர் நகரில் வாறுகால் அமைக்கப்படாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் கொசுத்தொல்லையும் ஏற்பட்டு நோய்கள் பரவ காரணமாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மகேஷ் தியாகராஜன், சங்கரன்கோவில்.
புதர் மண்டி கிடக்கும் பூங்கா
தென்காசி நகராட்சி 1-வது வார்டு இந்திராநகரில் புதிய பஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள பூங்கா புதர்மண்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இந்த பூங்காவை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கேட்டுக்கொள்கிறேன்.
-வேல்முருகன், தென்காசி.
கால்நடை மருத்துவர் நியமனம்
வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் அரசு கால்நடை மருத்துவமனையில் டாக்டர் நியமிக்க வேண்டும் என்று மூர்த்தி என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு டாக்டர் நியமிக்கப்பட்டு உள்ளார். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.