'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பத்மனேரி- சிங்கிகுளம் சாலையில் ஆற்றங்கரை அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சரிந்த நிலையில் இருப்பதாக வானுமாமலை என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்..

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

நெல்லை கொக்கிரகுளம் புது அம்மன் கோவில் அருகில் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள தெருக்குழாயிலும், வீட்டு குடிநீர் இணைப்புகளிலும் குறைந்தளவே தண்ணீர் வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-வசந்த், கொக்கிரகுளம்.

தெருவில் தேங்கிய குப்பைகள்

பாளையங்கோட்டை 34-வது வார்டு சிவலோகநாதன் தெருவில் வாறுகால் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பைக்கூளமாக காட்சி அளிப்பதுடன் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு குப்பைத்தொட்டி வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜா, பாளையங்கோட்டை.

சாய்ந்த மின்கம்பம்

திசையன்விளை தாலுகா நவ்வலடி துணை மின்நிலையம் அருகில் தோப்புவிளை சாலையில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குடிநீர் குழாயில் அடைப்பு

பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை பரணிநகர் வ.உ.சி. தெருவில் குடிநீர் குழாயில் அடைப்பு உள்ளதால் குறைந்தளவு தண்ணீரே வினியோகம் செய்யப்படுகிறது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-கிளாட்சன், பரணிநகர்.

பஸ் நிலையத்தில் சுகாதாரக்கேடு

வடக்கன்குளம் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வசதி இல்லை. இதனால் பயணிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாததுடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பஸ் நிலைய கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-சாய் சுரேஷ், வடக்கன்குளம்.

* தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கழிப்பறையை முறையாக பராமரிக்காததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு குடிநீர் வசதியும் இ்ல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஜெயக்குமார், தூத்துக்குடி.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை கிராமத்தில் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் வழிகாட்டு பலகை இல்லாததால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அவதிப்படுவதாக கோமதிநாயகம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக அங்கு வழிகாட்டு பலகை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தெருவிளக்கு தேவை

தூத்துக்குடி 49-வது வார்டு சிவந்தாகுளம் நடுத்தெருவில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

-முருகேசன், தூத்துக்குடி.

எலும்புக்கூடான மின்மாற்றி

சாத்தான்குளம் அருகே திருவரங்கநேரி- செட்டிகுளம் சாலையில் உள்ள மின்மாற்றியின் இரு மின்கம்பங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளன. அந்த மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதனால் பலத்த காற்றில் மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அன்றோ ஆடம்ஸ், சாத்தான்குளம்.

வேகத்தடை வேண்டும்

கோவில்பட்டி ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் இருபுற சர்வீஸ் ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இலுப்பையூரணி, புதுகிராமம், முகமதுசாலிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவில்பட்டி ரெயில் நிலையம், பழைய பஸ் நிலையத்துக்கு ஏராளமானவர்கள் இந்த வழியாகவே செல்கின்றனர். எனவே ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் சர்வீஸ் ேராடுகள் சந்திக்கும் இடத்தில் வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-பாலமுருகன், கோவில்பட்டி.

தபால் நிலைய வாசலில் ஆபத்தான பள்ளம்

நெல்லை-தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பாவூர்சத்திரம் தபால் நிலையம் முன்பும் பள்ளம் தோண்டி சாலை விரிவாக்கம் செய்தனர். தொடர்ந்து தபால் நிலையம் முன்பாக பள்ளத்தை சரிவர மூடாமல் சென்று விட்டனர். இதனால் தபால் நிலையத்துக்கு பொதுமக்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே தபால் நிலையம் முன்புள்ள ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்திரன், பாவூர்சத்திரம்.

அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?

கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரம் பஞ்சாயத்து பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் குடிநீர், தெருவிளக்கு, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பால்ராஜ், அரியநாயகிபுரம்.

வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

கடையம் சத்திரம் பாரதி பள்ளிக்கூடம் அருகில் உள்ள வேகத்தடையில் வெள்ளைநிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடையில் வெள்ளைநிற வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

வாறுகால் தூர்வாரப்படுமா?

ஆலங்குளம் தாலுகா ஓடைமறிச்சான் பஞ்சாயத்து கொல்லாங்குளம் கிராமத்தில் வாறுகால் பல மாதங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கருத்தப்பாண்டி, கொல்லாங்குளம்.

தெருநாய்கள் தொல்லை

தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறான தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-கார்த்திக், சுந்தரபாண்டியபுரம்.


Next Story