'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள்தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீர் ஓடை அமைக்கப்படுமா?
முக்கூடல் சடையப்பபுரத்தில் கழிவுநீர் ஓடை வசதி இல்லை. இதனால் கழிவுநீரானாது சாலையில் தேங்குகிறது. மழைகாலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே. கழிவுநீர் ஓடை அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பிரவின் பெரியசாமி, நெல்லை.
நோய் பரவும் அபாயம்
நெல்லை தச்சநல்லூர் வாலாஜாபேட்டை நடுத்தெருவில் உள்ள கழிவுநீர் ஓடை முழுவதும் மண் சேர்ந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
தினேஷ், தச்சநல்லூர்.
மரக்கிளை அகற்றப்படுமா?
திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூர் பஞ்சாயத்து ராஜம்மாள்புரம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் அடிப்பகுதி கிளை முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நிழலுக்கு ஒதுங்கும் இடமாக இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் முன் இந்த மரத்தின் கிளையை அகற்ற வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
ஆபத்தான கிணறு
திசையன்விளை அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையோரத்தில் உள்ள கிணறு பாதி உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
லலிதா, திசையன்விளை.
பஸ் முறையாக இயக்க வேண்டும்
வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புைடமருதூருக்கு பாபநாசம் அரசு பணிமனையில் இருந்து தடம் எண் 22 பி அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முறையாக இயக்கப்படுவது இல்லை. இதனால் இங்கு இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த பஸ்சை முறையாக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
சரவணன், அத்தாலநல்லூர்.
திறந்து கிடக்கும் கழிவுநீர் ஓடை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 17-வது வார்டு பூங்கா அருகே சேர்ந்தமரம் சாலையில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் ஓடை அடைப்பை சரி செய்வதற்காக திறக்கப்பட்டது. ஆனால், இந்த கழிவுநீர் ஓடை இன்னும் சரி செய்யப்படவில்லை. மேலும், கழிவு நீர் ஓடையில் மேல் மூடி போடாமல் திறந்த நிலையில் உள்ளதால் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. ஆகவே, இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
சகிலா பானு, கடையநல்லூர்
சாய்ந்த மின்கம்பம்
கடையம் யூனியன் முதலியார்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அருகே சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மின்கம்பம் சரிந்து விழுந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள். ஆகவே, இந்த மின்கம்பத்தை சீராக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அம்ஜத், முதலியார்பட்டி.
பராமரிப்பு இல்லாத பூங்கா
ஆலங்குளம் மலைக்கோவில் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும், இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து கிடக்கிறது. இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, இந்த பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுரேஷ் சொக்கலிங்கம், ஆலங்குளம்.
திறந்து கிடக்கும் வாறுகால்
கடையம் அருகே பொட்டல்புதூர் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் சாலையோரம் அமைந்துள்ள வாறுகால் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாறுகால் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். வாகன ஓட்டிகளின் நலன் கருதி திறந்த நிலையில் கிடக்கும் வாறுகாலை சிமெண்டு சிலாப்புகளை கொண்டு மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
திருக்குமரன், கடையம்.
பஸ் வசதி வேண்டும்
தென்காசி மாவட்டம் ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் இருந்து தாலுகா அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகம் செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் இங்கு இருந்து இந்த அலுவலகங்களுக்கு செல்லும் கிராம மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, ஆராய்ச்சிபட்டியில் இருந்து பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மாரிராஜ், ஆராய்ச்சிபட்டி.






