'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

சாலை வசதி தேவை

கொடைக்கானல் தாலுகா கே.சி.பட்டி ஊராட்சி கள்ளக்கிணறில் இருந்து 2½ கி.மீ. தூரத்தில் குப்பம்மாள்பட்டி உள்ளது. அதில் 1 கி.மீ. தூரம் மட்டும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. அது சேதம் அடைந்ததால் 1 கி.மீ. தூர சாலை புதிதாக அமைக்கப்படுகிறது. மீதமுள்ள 1½ கி.மீ. தூரம் சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே 2½ கி.மீ. தூரமும் முழுமையாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், குப்பம்மாள்பட்டி.

அரசு பஸ் பராமரிப்பு

நத்தத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று மாலை புறப்பட்ட அரசு பஸ்சில் முகப்பு விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பஸ் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. அதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பயணிகள் வேறு பஸ்சில் சென்றனர். எனவே அரசு பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

-சீனிவாசன், கோபால்பட்டி.

பழுதான தெருவிளக்கு

கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் பல தெருவிளக்குகள் பழுதாகி விட்டன. இரவில் தெருவிளக்குகள் எரியாததால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடுவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்து எரிய வைக்க வேண்டும்.

-பொதுமக்கள், கோம்பைத்தொழு.

குடிநீர் வினியோகம்

தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் குடிநீருக்காக மக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே கூடுதலாக பொது குழாய்களை அமைத்து, தினமும் குடிநீர் வினியோகம் செய்தால் நன்றாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஈஸ்வரன் தங்கராஜ், அம்மச்சியாபுரம்.

சேதம் அடைந்த மின்கம்பம்

பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுப்பட்டியில் பள்ளிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. மழைக்காலமாக இருப்பதால் சேதம் அடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் நடவேண்டும்.

-பொதுமக்கள், ஜி.கல்லுப்பட்டி.

போதை ஆசாமிகள் தொல்லை

ஆண்டிப்பட்டி பேரூராட்சி சக்கம்பட்டியில் யானை கோவில் பகுதியில் போதை ஆசாமிகள் தொல்லை அதிகமாக உள்ளது. மது பாட்டில்களை சாலையில் வீசி உடைத்து தொந்தரவு செய்கின்றனர். இதனால் பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே போதை ஆசாமிகளின் தொல்லையை தடுக்க வேண்டும்.

-சென்றாயபெருமாள், சக்கம்பட்டி.

சாக்கடை கல்வாயில் அடைப்பு

கம்பம் 26-வது வார்டு பார்க் சாலையில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மழைக்காலத்தில் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து சாலையில் ஓடுகிறது. மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலை முழுவதும் அசுத்தமாக காட்சி அளிக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி சரிசெய்ய வேண்டும்.

-மணிகண்டன், கம்பம்.

சமுதாயக்கூடம் பராமரிப்பு

நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி ஊராட்சி முத்துலிங்கபுரம் கிழக்கு தெருவில் உள்ள சமுதாயக்கூடம் சேதம் அடைந்து காணப்படுகிறது. அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரித்து புதுப்பிக்க வேண்டும்.

-அய்யர்பாண்டி, விளாம்பட்டி.

மின்கசிவால் ஆபத்து

வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரத்தில் உணவகங்கள் பின்புறம் உள்ள மின்மாற்றியில் அடிக்கடி மின்கசிவு ஏற்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்மாற்றியை சரிசெய்ய வேண்டும்.

-பெரியசாமி, எரியோடு.

சேதம் அடைந்த சாலை

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி, பொம்மநல்லூர் பகுதிகளில் நெடுஞ்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-ரெங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story