'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

குப்பைகள் அகற்றப்படுமா?

நெல்லை டவுன் லாலாசத்திரம் முக்கு பகுதியில் உள்ள வாய்க்காலில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி, சுகாதார கேடு நிலவுகிறது. ஆகையால் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பேண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- முருகேஷ், நெல்லை டவுன்.

அடிப்படை வசதிகள் தேவை

தெற்கு வீரவநல்லூர் பகுதியில் ரெயில் நகரில் குடியிருப்புகள் உள்ளன. அங்கிருந்து பிரதான சாலை வரை சுமார் ½ கிலோ மீட்டர் தொலைவுக்கு மண்சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஆகையால் அங்கு சாலை வசதி செய்துதர வேண்டும். மேலும் குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- ஆனந்தராஜ், ரெயில்நகர்.

சாலையில் அபாய பள்ளங்கள்

மூலைக்கரைப்பட்டி பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் நாங்குநேரி செல்லும் சாலையில் இசக்கி அம்மன் கோவில் அருகே 2 பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அதை அதிகாரிகள் சரிசெய்து தரவேண்டும். மேலும் நான்கு சாலைகள் சந்திக்கும் அந்த பகுதியில் உரிய வேகத்தடைகள் அமைத்து தருமாறும் வேண்டுகிறேன்.

- மணிகண்டன், கடம்பன்குளம்.

சேதமடைந்த மின்கம்பம்

நெல்லை வி.எம்.சத்திரம் எம்.என்.அப்துல்ரகுமான் முதலாளிநகர் 3-வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பாக அந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

- பாலகிருஷ்ணன், நெல்லை.

* அம்பை தாலுகா செட்டிமேடு கீழத்தெருவில் கடைசியாக உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. அதை சரிசெய்ய வேண்டும். மேலும் செட்டிேமடு வாய்க்கால் பாலத்தில் சிறுவர்கள் குளிக்க செல்கின்றனர். அந்த பகுதியில் வாகனங்கள் ேவகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

- விக்டர், செட்டிமேடு.

ஓடை தூர்வாரப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா அக்கநாயக்கன்பட்டி ஊராட்சி ஒட்டுடன்பட்டி கிராமத்தில் வேட்டவராயன்குளம் மற்றும் அதனுடைய மறுகால் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக, மழை காலத்தில் வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. ஆகையால் ஓடையில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

- ரவிச்சந்திரன், ஒட்டுடன்பட்டி.

வேகமாக வரும் வாகனங்கள்

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார் கண்காணித்து, வாகன ஓட்டிகள் அதிவேகமாக வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

- பாலகணபதி, தேரியூர்.

வேகத்தடை மீண்டும் வருமா?

கோவில்பட்டி புதுரோடு, எட்டயபுரம் ரோடு, மதுரை மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்த ேவகத்தடைகள், முதல்-அமைச்சர் வருகையையொட்டி அகற்றப்பட்டன. அங்கு மீண்டும் வேகத்தடைகள் அமைக்காததால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, அங்கு வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- பாலமுருகன், கோவில்பட்டி.

பராமரிப்பு இல்லாத பூங்கா

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா சரிவர பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், முட்புதர்கள் மண்டியும் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தை காண முடிகிறது. சிறுவர்கள், பொதுமக்கள் நலன் கருதி, அந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை சீரமைத்தும், முட்புதர்களை அகற்றியும் சரியான முறையில் பராமரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

ரேஷன் கடை வேண்டும்

ஏரல் அருகே மேலமங்கலகுறிச்சி கிராமத்தில் ரேஷன் கடை இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழமங்கலகுறிச்சிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் வாகன வசதி இல்லாதவர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் அதிகாரிகள் மேலமங்கலகுறிச்சியில் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- பெருமாள், மேலமங்கலகுறிச்சி.

உயர்கோபுர மின்விளக்கு ஒளிருமா?

செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் சிலை அமைந்துள்ளது. அந்த சிலை இருக்கும் சந்திப்பு பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த ஓராண்டு காலமாக ஒளிராமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருளில் மூழ்கி காணப்படுகிறது. எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?்

- கனியமுதன். செங்கோட்டை

குடிநீர் குழாயில் உடைப்பு

கடையம் அருகே முதலியார்பட்டி காந்திநகர் பகுதியில் சாலையோரம் உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கடந்த 2 வாரமாக இதே நிலை நீடிப்பதால் அந்த பகுதியில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுகிறேன்.

- கோதர்மைதீன், முதலியார்பட்டி.

சுகாதாரக்கேடு

திருவேங்கடம் பஜார் வழியாக கூத்தாடிகுளத்துக்கு செல்லும் ஓடையில் குப்பைக்கூளங்களாக உள்ளது. இதனால் ஓடையில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி கழிவுநீர் வழிந்தோடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ராமஜெயம், திருவேங்கடம்.

குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

கடையம் யூனியன் கட்டேரிபட்டி கிராமத்தில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து தண்ணீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- துரை, கட்டேரிபட்டி.

பஸ்நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள்

திருவேங்கடம் பஸ் நிலையத்துக்குள் பெரும்பாலான பஸ்கள் செல்லாமல் பஜாரிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. அங்கு குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அனைத்து பஸ்களும் திருவேங்கடம் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-சங்கர், திருவேங்கடம்.


Next Story