'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
பயன்படாத குடிநீர் எந்திரம்
தேனி பழைய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் பயன்பாட்டில் இல்லை. மேலும் குடிநீர் வழங்கும் எந்திரம் மூடி கிடக்கிறது. இதனால் பயணிகள் கடைகளில் அதிக விலைக்கு குடிநீரை வாங்கும் நிலை உள்ளது. பயணிகளின் சிரமத்தை தவிர்க்க, குடிநீர் எந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வீரகுரு, தேனி.
போக்குவரத்துக்கு இடையூறு
கடமலைகுண்டுவில் தேவர் சிலை பள்ளி செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துகின்றனர். சில நேரம் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். -ரமேஷ்குமார், கடமலைகுண்டு.
'தினத்தந்தி'க்கு நன்றி
நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள் நத்தம் ஊராட்சி குத்தில்நாயக்கன்பட்டியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி தாமதம் ஆவதாக 'தினத்தந்தி'யின் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் கட்டி தந்துள்ளனர். இதற்காக 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். பொதுமக்கள், குத்தில்நாயக்கன்பட்டி.
சாலையை ஆக்கிரமிக்கும் செடிகள்
திண்டுக்கல்-தேனி சாலையில் வக்கம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து விட்டன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். -ராகவன், திண்டுக்கல்.
போக்குவரத்து நெரிசல் (படம்)
வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடி, பன்றிமலைக்கு செல்லும் பஸ்களை சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, பெரும்பாறை.
கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் சேதம்
ஆத்தூர் தாலுகா ஆலமரத்துப்பட்டியில் உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரியின் கட்டிடம் சேதம் அடைந்து விட்டது. கட்டிடத்தின் மேல்பகுதியில் செடிகள் முளைத்து காணப்படுகின்றன. எனவே கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும். பத்மநாபன், ஆலமரத்துப்பட்டி.
மலைப்பாதையில் பழுதாகும் அரசு பஸ்
வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடிக்கு செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி மலைப்பாதையில் பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் பெண்கள், முதியவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே மலைப்பாதையில் இயக்கப்படும் பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும். கணேஷ்பாபு, தாண்டிக்குடி.
ஆற்றின் குறுக்கே பாலம்
பெரியகுளம் அருகே அ.மேல வாடிப்பட்டி-குண்டலப்பட்டி இடையே வைகை ஆறு செல்கிறது. இந்த பகுதியில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லை. இதனால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். -பொதுமக்கள், குண்டலப்பட்டி.
சாலையில் அபாய பள்ளம்
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் தெற்கு வாசல் எதிரே சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. மேலும் அது வளைவான பகுதியாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். அந்த அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டும். -கணேசன், திண்டுக்கல்.
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.