ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை 4-வது மதகில் திடீர் பழுது வலைகள் அடித்து செல்லப்பட்டதால் மீனவர்கள் கவலை


ஊத்தங்கரை அருகே  பாம்பாறு அணை 4-வது மதகில் திடீர் பழுது  வலைகள் அடித்து செல்லப்பட்டதால் மீனவர்கள் கவலை
x

ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையின் 4-வது மதகில் திடீரென பழுது ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் மீன்பிடி வலைகள் அடித்து செல்லப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையின் 4-வது மதகில் திடீரென பழுது ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் மீன்பிடி வலைகள் அடித்து செல்லப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பாம்பாறு அணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை கடந்த 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. 587 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணை மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இதுவரை பாம்பாறு அணை 13 முறை நிரம்பி உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஊத்தங்கரை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு அணையில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதையொட்டி அணையின் உபரிநீர் 5 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு சாத்தனூர் அணையை சென்றடைகிறது.

திடீர் பழுது

இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு அணையின் 4-வது மதகில் திடீரென ரோப் பேரிங் பழுதடைந்து இரும்பு கயிறு துண்டாகி அறுந்து விழுந்ததால் மதகில் இருந்த இரும்பு கதவு திறந்தது. இதனால் 4-வது மதகில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. மேலும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, போலீசார் மற்றும் அதிகாரிகள் அணைக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மேலும் அதிகளவில் தண்ணீர் வெளியேறுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். மதகு திறந்து தண்ணீர் வெளியேறும் காட்சியை ஏராளமான பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.

மீனவர்கள் கவலை

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பாம்பாறு அணையின் 4-வது மதகு இரும்பு கயிறு அறுந்து கதவு திறந்ததால் தண்ணீர் அதிகளவில் வெளியேறுகிறது. மதகின் இரும்பு கயிறு சீரமைப்பு பணி 3 நாட்களுக்குள் நிறைவடைந்து விடும் என்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், பாம்பாறு அணையில் கட்லா, ரூபி, மிர்கால், ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் உள்ளன. இதற்காக அணையில் 16 யூனிட் வலைகள் உள்ளன. இந்த வலைகளின் மதிப்பு ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். தற்போது திடீரென 4-வது மதகு கயிறு அறுந்து தண்ணீர் வெளியேறுவதால் வலைகள் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இதனால் சுமார் 40 மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என கவலை அடைந்துள்ளோம். மேலும் ஆண்டுதோறும் அணை மதகு பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் முறையாக மேற்கொள்வதில்லை என்றனர்.


Next Story