விவசாய நிலங்கள் பாசன வசதி பெற அனிச்சம்பாளையம் கதவணை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


விவசாய நிலங்கள் பாசன வசதி பெற  அனிச்சம்பாளையம் கதவணை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?  விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்கள் பாசன வசதி பெற அனிச்சம்பாளையம் கதவணை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

நாமக்கல்

பரமத்திவேலூர்:

விவசாய நிலங்கள் பாசன வசதி பெற அனிச்சம்பாளையம் கதவணை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கதவணை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இதன் காரணமாக ஒவ்வொரு சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதான வாக்குறுதியாக கதவணை கட்டி தரப்படும் என்ற வாக்குறுதிஇருந்தது.

ஆனால் இன்றளவும் கதவணை கட்டப்படாமல் உள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை என்பது சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்களுக்கு நிறைவேறாத கோரிக்கையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்‌ முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணியின் முயற்சியால் கடந்த ‌ஆண்டு பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு செவி சாய்க்கப்பட்டது.

ஒரு வழிப்பாலம்

அதாவது பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தில் இருந்து கரூர் மாவட்டம் நஞ்சை புகளூர் இடையே ‌காவிரி ஆற்றின் குறுக்கே ‌ரூ.406.50 கோடி மதிப்பில் ‌புதிய கதவணை அமைப்பதற்கான பணி கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி தொடங்கியது. சென்னையில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த விழாவில் மத்திய ‌உள்துறை‌ மந்திரி அமித்ஷா காணொலி காட்சி மூலம் கதவணை கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து அனிச்சம்பாளையம், நஞ்சை புகளூர் இடையே 0.8 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்கும் வகையில் நபார்டு வங்கியின் ‌நிதியுதவியுடன் கதவணை கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு 1,056 மீட்டர் நீளத்தில் 73 கதவுகளுடன் கதவணை அமைய உள்ளது. இந்த கதவணையின் மேல் பகுதியில் 3.65 மீட்டர் அகலத்தில் ஒரு வழிப்பாலம் அமைக்கப்பட உள்ளது. கதவணையில் 56 நீர்ப்போக்கிகளும், 17 மண் போக்கிகளும் அமைக்கப்படுகிறது. அதேபோல் வினாடிக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்‌ செய்யும்‌ வகையில் வடிவமைக்கப்படுகிறது.

பாசன வசதி

இங்கு கதவணை அமைவதன் மூலம் மோகனூர் வாய்க்கால் பகுதியில் 2,583 ஏக்கர் நிலங்களும், வாங்கல் வாய்க்கால் பகுதியில் 1,458 ஏக்கர் விவசாய ‌நிலங்களும் பாசன வசதி பெறும். மேலும் கதவணையின் மேல்புறம் அமையும் நீரேற்று நிலையம் மூலம் புகளூர் காகித ஆலைக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியும். இதுகுறித்து கோப்பணம்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜன் கூறியதாவது:- கதவணை கட்டப்பட்டு பயன்பாட்டுக்க கொண்டு வரப்பட்டால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளில் குடிநீர் ஆதாரம் மேம்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும்‌ உயரும் வாய்ப்புள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்களான மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு ஆகியவையும் வளர்ச்சி அடையும். பொதுமக்களின் பொருளாதார நிலை மேம்படும். எனவே கதவணை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அகலப்படுத்த வேண்டும்

இதுகுறித்து பரமத்திவேலூர் ராஜவாய்க்கால் விவசாயிகள் சங்க செயலாளர் பெரியசாமி கூறியதாவது:- அனிச்சம்பாளையத்தில் இருந்து புகளூர் இடையே கதவணை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அதற்காக மிகப்பெரிய அளவில் தளவாட பொருட்கள் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இதனால் பரமத்திவேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் வரை உள்ள சாலை பழுதடைந்து குறுகிய சாலையாக உள்ளது‌‌. போர்க்கால அடிப்படையில் சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்க வேண்டும். அப்போது தான் கதவணை பணிகள் தாமதமின்றி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

விரைந்து முடிக்க வேண்டும்


Next Story