விவசாய நிலங்கள் பாசன வசதி பெற சின்னாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
விவசாய நிலங்கள் பாசன வசதி பெற சின்னாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாலக்கோடு:
விவசாய நிலங்கள் பாசன வசதி பெற சின்னாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
காவிரியில் கலக்கும் சின்னாறு
தர்மபுரி மாவட்டத்தில் ஓடும் முக்கிய ஆறுகளில் ஒன்றாக சின்னாறு திகழ்ந்து வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பஞ்சப்பள்ளி பகுதியில் கட்டப்பட்டுள்ள அணை மூலம் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தர்மபுரி நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் வசதியும் பெற்று வருகிறது. சின்னாறு பஞ்சப்பள்ளி, அத்திமுட்லு, அமானி மல்லாபுரம், ஜெர்தலாவ், பொப்பிடி, தொல்ல காது, கூட்டாறு, கோடுபட்டி வழியாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
பஞ்சப்பள்ளியில் இருந்து ஒகேனக்கல் வரை சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு சின்னாற்றின் குறுக்கே இதுவரை தடுப்பணைகள் எதுவும் கட்டப்படவில்லை. இதனால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் சுமார் 2 டி.எம்.சி. தண்ணீர் இந்த பகுதி மக்களுக்கு பயன்படாமல் காவிரி ஆற்றில் கலக்கிறது.
தடுப்பணை
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சின்னாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இந்த தண்ணீர் பெரும்பாலும் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படாமல் இறுதியாக கடலில் கலக்கும் சூழ்நிலை உள்ளது. சின்னாற்றில் தொல்ல காது என்ற பகுதியில் நீர்வீழ்ச்சி உள்ளது.
இந்த பகுதியில் தடுப்பணை கட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
4 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி
கரகூரைச் சேர்ந்த விவசாயி குமார்:- சின்னாற்றின் குறுக்கே தொல்ல காது பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக விவசாயிகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. சின்னாற்றில் இப்போது அதிகளவில் தண்ணீர் ஓடி ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது. தொல்ல காது பகுதியில் தடுப்பணை கட்டினால் அந்த தண்ணீர் மூலம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த பகுதிகளில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கும். எனவே இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொப்பிடியை சேர்ந்த விவசாயி முருகேசன்:-
பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி வழியாக பாயும் சின்னாறு ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது. பஞ்சப்பள்ளி முதல் ஒகேனக்கல் வரை சின்னாறு ஓடும் பகுதியில் எந்த இடத்திலும் தடுப்பணை இதுவரை கட்டப்படவில்லை. இதனால் இந்த ஆறு ஓடும் பகுதிகளை ஒட்டி உள்ள கிராமங்களுக்கு இதுவரை இந்த தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. தொல்ல காது பகுதியில் தடுப்பணை கட்டினால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். நீண்ட காலமாக நிலவி வரும் வறட்சி நிலை மாறும். இதற்கான நடவடிக்கையை அரசு விரைவாக எடுக்க வேண்டும்.
நிலத்தடி நீர்மட்டம் உயரும்
அமானிமல்லாபுரத்தைச் சேர்ந்த விக்டோரியா:- சின்னாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நன்றாக மழை பெய்து வருகிறது. இதனால் சின்னாற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் குறைந்தபட்சம் 2 டி.எம்.சி. தண்ணீர் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த பகுதியில் தடுப்பணை கட்டி தண்ணீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு கொண்டு சென்றால் பெரும்பாலான ஏரிகளை நிரப்பி விட முடியும்.
மானாவாரி விவசாய சாகுபடி அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். எனவே தொல்லைகாது பகுதியில் சின்னாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.