பழுதடைந்து ஆபத்தான நிலையில் வடவாறு பாலம்


பழுதடைந்து ஆபத்தான நிலையில் வடவாறு பாலம்
x

தஞ்சையில் பழுதடைந்த ஆபத்தான நிலையில் உள்ள வடவாறு பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்


தஞ்சையில் பழுதடைந்த ஆபத்தான நிலையில் உள்ள வடவாறு பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இரட்டை பாலம்

தஞ்சை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாரியம்மன் கோவில் சாலை, மோத்திரப்பசாவடி, சாந்தப்பிள்ளை கேட் பகுதிகளில் மேம்பாலம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.இதையடுத்து தற்போது சாலையை அகலப்படுத்தும் வகையில் ரூ.6 கோடி செலவில் தஞ்சை இர்வீன்பாலம் பகுதியில் கல்லணைக்கால்வாயிலும், கரந்தை போக்குவரத்துக்கழக பணிமனை அருகே வடவாற்றிலும் இரட்டை பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வடவாறு பாலம்

ஏற்கனவே பழைய திருவையாறு சாலையில் இருந்த வடவாறு பாலம் பழுதடைந்து இருந்ததால் அவை அகற்றப்பட்டு, புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை வடவாற்றில் உள்ள மற்றொரு பாலமும் மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில் இருந்து கொடிக்காலூர் செல்லும் சாலையில் வடவாற்றில் இந்த பாலம் காணப்படுகிறது. பாலத்தில் இரு பகுதியிலும் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு இரும்பு கம்பியும் பொருத்தப்பட்டு உள்ளது.தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் கரந்தை பகுதிக்கும், கொடிக்காலூர் பகுதிக்கும், கும்பகோணம் பைபாஸ் சாலைக்கும் இந்த வழியாக சென்று வருகின்றனர். இதேபோல் அம்மாதோட்டம், கடகடப்பை, காடுகாவல், சித்தர்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமத்தை சேர்ந்தவர்களும் தஞ்சை மாநகருக்கு எளிதாக போக்குவரத்து நெரிசல் இன்றி வந்து செல்வதற்கு இந்த கொடிக்காலூர் சாலையை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

5 கி.மீட்டர் தூரம்

இந்த பாலம் இல்லாவிட்டால் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்படும். மேலும் மேற்கண்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் தஞ்சை கீழவாசல் பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்கும், வேலைக்கு வருவதற்காகவும் இந்த வழியாகத்தான் வர வேண்டும். தற்போது இந்த பாலம் மிகவும் மோசமாக காட்சி அளிப்பதால் அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.இந்த பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது பாலத்தின் இருபகுதியிலும் அமைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் தூண்கள் சேதம் அடைந்து எலும்புக்கூடு போல காட்சி அளிக்கிறது. அதே போல் பாலத்தின் பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது.எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மக்கள் கருத்து

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, வடவாற்றில் உள்ள பாலம் குறுகியதாக உள்ளது. மேலும் இந்த பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நாளுக்கு நாள் பாலம் அதன் ஸ்திரத்தன்மையை இழந்து வருகிறது. பாலத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் தான் உள்ளது.மேலும் பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்புக்கட்டைகளும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. எனவே அதிகாரிகள் இந்த பாலத்தை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தற்போது உள்ள பாலத்தை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக புதியபாலம் அகலமாக கட்டித்தர வேண்டும். மேலும் புதிய பாலம் கட்டும் வரை பொதுமக்கள் எளிதில் தஞ்சை வந்து செல்வதற்கு வசதியாக மாற்றுப்பாதையும் வடவாற்றில் அமைத்து தர வேண்டும் என்றனர்.


Next Story