புறக்கோட்டகம் கிராமத்துக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா
பள்ளி மாணவர்கள் நலன் கருதி புறக்கோட்டகம் கிராமத்துக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோட்டூர்;
பள்ளி மாணவர்கள் நலன் கருதி புறக்கோட்டகம் கிராமத்துக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சேதமடைந்த சாைல
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மழவராயநல்லூர் ஊராட்சியில் புறக்கோட்டகம் என்ற கிராமம் உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.இந்த கிராமத்தில் இருந்து செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் சாலைகளின் இரு புறங்களிலும் செடி, கொடிகளும் முட்செடிகளும் வளர்ந்து அடர்ந்த காடுகள் போல் உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் ஒரு கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு மாணவ- மாணவிகள் நடந்து சென்று வர வேண்டும்.
விஷஜந்துக்கள்
சாலை சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளதால் இந்த கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வருவதில்லை. மேலும் விளைநிலங்களுக்கு உரம் போன்ற மூலப் பொருட்கள் கொண்டு செல்ல முடியாமலும் அறுவடை காலங்களில் நெல் மூட்டைகளை கொண்டு வர முடியாமலும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் அடர்ந்து வளா்ந்து உள்ளதால் விஷஜந்துக்களின் எண்ணிக்கையும் இந்த பகுதியில் அதிகரித்து உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் நேரடியாக இந்த சாலையை பார்வை யிட்டு முள்ளியாற்றுகரையில் செல்லும் இந்த சாலையை தட்டான் கோவில் கிராமத்திலிருந்து திருவண்டுதுறை பாலம் வரை அகலப்படுத்தி தார் சாலையாக மாற்ற வேண்டும். மேலும் சாலை ஓரங்களில் பஸ் நிறுத்தம் வரை தெரு மின்விளக்கு அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.