சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் திருவாரூர் புதிய பஸ் நிலைய நுழைவு சாலை


சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் திருவாரூர் புதிய பஸ் நிலைய நுழைவு சாலை
x

திருவாரூரில் பெய்த தொடர்மழையால் புதிய பஸ் நிலைய நுழைவு சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூரில் பெய்த தொடர்மழையால் புதிய பஸ் நிலைய நுழைவு சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

திடீர் மழை

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட முடியாமல் அச்சப்பட்டனர்.மேலும் குளிர்பான கடைகள், பழக்கடைகளை மக்கள் வழக்கத்தை விட அதிகமாக மக்கள் நாடினர். சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் அனல் காற்றால் வாகனத்தை ஓட்ட முடியாமல் அவதியடைந்தனர். இரவில் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் தூங்க முடியாமல் மக்கள் தவித்தனர். திருவாரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 96 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென மழை பெய்ய தொடங்கியது.

வாகன ஓட்டிகள் அவதி

இந்த மழையால் திருவாரூர் கீழ வீதி மற்றும் தெற்கு வீதி பகுதியில் தண்ணீர் செல்ல வழியின்றி குளம் போல மழைநீர் தேங்கி காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். இதேபோல் துர்காலயா சாலை, விளமல் கூட்டுறவு நகர், தியானபுரம் செல்லும் பகுதி, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இந்த மழையின் காரணமாக கோடை நெல் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சேறும் சகதியுமாக சாலை

திருவாரூர் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் திருவாரூர் புதிய பஸ் நிலையம் நுழைவு சாலையில் மழை நீர் தேங்கி குளம் போல் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

விபத்துகள்

இதனால் இந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேறும், சகதிகளில் சிக்கி கொள்கின்றனர்.பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விடுகின்றனர். இந்தநிலையில் நேற்று பெய்த மழையால் சாலையில் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் தவறி விழுந்தனர். இதனால் பள்ளம் இருப்பதை உணர்த்தும் விதமாக கற்களை சாலையில் அடுக்கி வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை தரம் உயர்த்தி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story