மழையூர், திருமயம் பகுதிகளில் சோளம்-நெற்பயிர்கள் சேதம்
கறம்பக்குடி அருகே மழையூர், திருமயத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் பயிரிடப்பட்டிருந்த சோளம் மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பயிர்கள் சேதம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை கறம்பக்குடி தாலுகாவில் உள்ள மழையூர், மாங்கோட்டை, களபம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் சில பகுதிகளில் சூறை காற்றுடன் பெய்த மழை விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மழையூர் அருகே மாங்கோட்டை கீழப்பட்டி, களபம் உள்ளிட்ட கிராமங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் அப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் சோள பயிர்கள் காற்றில் சாய்ந்தும் மழை நீரில் மூழ்கியும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் எதிர்பாராத இந்த திடீர் காற்று மற்றும் மழையால் சோள பயிர்கள் முற்றிலும் சாய்ந்து விட்டன. இதேபோல் அறுவடை தருவாயில் இருந்த நெற் பயிர்களும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளன.
இதனால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எனவே வேளாண்துறை அதிகாரிகள் எங்கள் பகுதியில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
வாழைகள் சேதம்
கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன் விடுதி, வெட்டன் விடுதி பகுதிகளில் வீசிய சூறாவளி காற்று மற்றும் பலத்த மழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 20 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன. இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யப்பட இருந்த வாழைத்தார்கள் நாசமானதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர். அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெற்பயிர்கள் சேதம்
திருமயத்தில் ஏராளமான விவசாயிகள் கோடை உழவு செய்து விவசாயம் செய்திருந்தனர். தற்போது நெற்கதிர்கள் அனைத்தும் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் 2 மணி நேரமாக பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் அந்த பகுதியில் ஏராளமான வயல்களில் நெற்கதிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் மன வேதனை அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.