கண்மாய் நீர் வயலுக்குள் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்
நரிக்குடி அருகே கண்மாய் நீர் வயலுக்குள் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதமானது.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே கண்மாய் நீர் வயலுக்குள் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதமானது.
உபரிநீர் திறப்பு
நரிக்குடி அருகே உள்ள விளக்குச்சேரி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆவணி மாதம் நெல் விதைப்பு பணிகளை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். வயலில் களையெடுத்தல், நீர்ப்பாய்ச்சுதல், உரமிடுதல் என பல்வேறு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வைகை அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில் பெரும்பாலான கண்மாய்கள் முழுவதும் நிறைந்து வருகின்றன.
பயிர்கள் மூழ்கின
வைகை அணையிலிருந்து பெருக்கெடுத்து வந்த அதிக நீர்வரத்து காரணமாக கிருதுமால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருதுமால் ஆற்றில் அதிக நீர்வரத்து காரணமாக மேலப்பருத்தியூர் கண்மாய் நிறைந்து அருகே உள்ள வயலுக்குள் கண்மாய் நீர் புகுந்தது. இதனால் விளக்குச்சேரி கிராமத்தில் 100 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்து இருந்தோம். இன்னும் 2 மாதங்களில் அறுவடை செய்ய காத்திருந்த நிலையில் கண்மாய் நிறைந்து விளை நிலங்களுக்குள் நீர் புகுந்து நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நோிட்டது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.