அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள சிற்பம் சேதம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள சிற்பம் சேதமடைந்தது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் என 4 கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன.
இதில் பே கோபுரத்தை தவிர்த்து மற்ற கோபுர நுழைவு வாயில்கள் மூலம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த 4 கோபுரங்களும் பல்வேறு கடவுள்களின் சிற்பங்களால் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள கையில் சிறிய சூலத்துடன் அமர்ந்த நிலையில் 4 தலைகளுடன் காணப்பட்ட அம்மன் சிற்பம் ஒன்று சேதம் அடைந்து காணப்பட்டது.
இந்த சிற்பம் கடந்த ஓரிரு தினங்களாக பெய்துவரும் கன மழையின் காரணமாக உடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உடைந்த சிற்பத்தை சீர் செய்யும் நடவடிக்கையில் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.