சேதம் அடைந்த சிமெண்டு சாலைகள்


சேதம் அடைந்த சிமெண்டு சாலைகள்
x

நாமக்கல் 18-வது வார்டில் பழுதான சிமெண்டு சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல்

18-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 18-வது வார்டில் ஏ.எஸ்.பேட்டை, திருவள்ளுவர் நகர், கருங்காட்டு பழனிசாமி தெரு, குழந்தான் தெரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டில் 2 ரேஷன்கடைகள் உள்ளன. தனியார் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இந்த வார்டு பழைய நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால், பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனால் கழிவுநீர் பிரச்சினை பெரிய அளவில் இல்லை. இருப்பினும் திருவள்ளுவர் நகர் மட்டும் பெரியப்பட்டி ஊராட்சியில் இடம் பெற்று இருந்த பகுதி என்பதால், அங்கு இதுவரை பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படவில்லை. எனவே அங்கு கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த வார்டில் 1,203 ஆண்கள், 1,307 பெண்கள், ஒரு இதரர் என மொத்தம் 2,511 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இந்திராணி ராஜவேல் வெற்றிபெற்றார். நகராட்சியின் பிற வார்டுகளை போல இந்த வார்டிலும் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.

அங்கன்வாடி மையம்

கருங்காட்டு பழனிசாமி தெருவை சேர்ந்த நல்லம்மாள் கூறியதாவது:-

எங்கள் வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும். இதேபோல் எங்கள் வார்டில் அங்கன்வாடி மையம் இல்லை. எனவே அருகில் உள்ள வார்டுக்கு சுமார் 25 குழந்தைகள் தினசரி சென்று வருகின்றனர். இது தாய்மார்களுக்கு பெரும் பணியாக இருந்து வருகிறது. எனவே எங்கள் வார்டிலேயே அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும்.

வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன்கடைக்கு சொந்த கட்டிடம் கட்டித் தர வேண்டும். தெருவிளக்குகள் முழுமையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிமெண்டு சாலைகள் சீரமைக்கப்படுமா?

குழந்தான் தெருவை சேர்ந்த ஆனந்த்:-

எங்கள் வார்டில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் இதுவரை பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாதாள சாக்கடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் குழந்தான் தெரு மற்றும் கருங்காட்டு பழனிசாமி தெருவில் உள்ள வீதிகளில் சிமெண்டு சாலை அமைத்து சுமார் 15 ஆண்டுகள் ஆவதால், அவை பழுதான நிலையில் காணப்படுகின்றன. எனவே சிமெண்டு சாலைகளை சீரமைத்து புதுப்பித்து தர வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களின் வசதிக்காக நூலகம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்?

இது குறித்து 18-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி ராஜவேல் கூறியதாவது:-

நான் தினசரி பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறேன். நான் பொறுப்பேற்ற பிறகு திருவள்ளுவர் நகர் பகுதியில் ரூ.8 லட்சம் செலவில் சிறுபாலம் அமைத்து கொடுத்து உள்ளேன். இதேபோல் அங்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கழிவுநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்தி கொடுத்து உள்ளேன். திருவள்ளுவர் நகரில் மண்சாலை தார்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.

ஏ.எஸ்.பேட்டை மெயின்ரோட்டில் உள்ள பொதுகிணறு பாதுகாப்பு இல்லாமல் இருந்து வந்தது. அதற்கு கம்பி வேலி அமைத்து கொடுத்து உள்ளேன். கருங்காட்டு பழனிசாமி தெரு, குழந்தான் தெருவில் பழுதான சிமெண்டு சாலைகளை, வடிகால் வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். விரைவில் அவை புதுப்பிக்கப்படும்.

நான் பொறுப்பேற்பதற்கு முன்பு 4, 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 2,3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் திருவள்ளுவர் நகர் பகுதியில் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையம் அமைக்கவும், தெருநாய்களை கட்டுப்படுத்தவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறேன். பாதாள சாக்கடையை பொறுத்த வரையில் நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளில் விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அப்போது திருவள்ளுவர் நகரிலும் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்டு மக்களுக்கு வேண்டியவை

1. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

2. அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும்.

3. பழுதான சிமெண்டு சாலைகளை சீரமைக்க வேண்டும்.

4. விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி.

5. மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு நூலகம்.

6. ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும்.


Next Story