சேதமடைந்த கிளியனூர் ரேஷன் கடை


சேதமடைந்த கிளியனூர் ரேஷன் கடை
x

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த கிளியனூர் ரேஷன் கடை கட்டிடத்தை இடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த கிளியனூர் ரேஷன் கடை கட்டிடத்தை இடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டிடத்தில் விரிசல்கள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் கிளியனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பயன்பாட்டிற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் வைத்து அரிசி, சீனி, ஆயில், துவரம் பருப்பு, மண் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அந்த பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக கட்டிடத்தின் மேற்கூரை பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மழை காலங்களில், மழை தண்ணீர் மேற்கூரையில் ஏற்பட்ட விரிசல்கள் வழியாக உள்பகுதியில் சென்று கட்டிடத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்களை சேதப்படுத்தும் நிலை காணப்படுகிறது.

கட்டிடம் இடிக்கப்படுமா?

இந்த விரிசல்கள் வழியாக தண்ணீர் கசிவதால் பொருட்கள் வாங்க செல்பவர்களும், திடீரென மழை பெய்யும் போது வெளி வாயிலில் நிற்க முடியாத நிலையும் உள்ளன. இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைப்பு செய்து தர வேண்டும். இல்லையெனில் அந்த கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story