சேதமடைந்த கோட்டடைச்சான் வாய்க்கால் மதகு


சேதமடைந்த கோட்டடைச்சான் வாய்க்கால் மதகு
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே சேதமடைந்த கோட்டடைச்சான் வாய்க்கால் மதகை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே சேதமடைந்த கோட்டடைச்சான் வாய்க்கால் மதகை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசனம் பெற்று வருகிறது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை நம்பி மேலதேனூர், கொண்டல் கொட்டாயமேடு, பத்தங்குடி, வள்ளுவர்குடி, மருதங்குடி, ஆலஞ்செரி நிம்மேலி, அகனி, தென்னலக்குடி, சீர்காழி சட்டநாதபுரம், தென்பாதி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம் உள்ளிட்ட கோவிலை சேர்ந்த விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளின் வடிவாய்க்காலாக கோட்டடைச்சான் வாய்க்கால் இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் தென்பாதி திட்டை ரோட்டில் இருந்து பிரிந்து தட்சிணாமூர்த்தி நகர், மாரிமுத்து நகர் வழியாக உப்பனாற்றில் கலந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வடிவாய்க்காலில் திட்டை ரோட்டின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மதகு பராமரிப்பின்றி செடிகள் முளைத்து, இடியும் நிலையில் உள்ளது.

குப்பைகள் கொட்டுவதால்...

மேலும் இந்த வாய்க்காலில் பாசன நீருக்கு பதிலாக கழிவுநீர் கலந்து வருகிறது. அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் இந்த வடிவாய்க்காலில் குப்பைகளை கொட்டுவதால் வாய்க்கால் முழுவதும் குப்பை மேடாக காணப்படுகிறது. இந்த குப்பையில் உள்ள உணவு கழிவுகளை உண்பதற்காக வரும் பன்றிகள் அதை கிளறிவிட்டு செல்வதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் சேதம் அடைந்த நிலையில் உள்ள மதகு ஷட்டரை சீரமைத்து தர வேண்டும். வாய்க்காலில் கழிவு நீர் விடுவதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய வடிவாய்க்கால்

இதுகுறித்து கழுமலையாறு பாசன விவசாய சங்க தலைவர் கோவில் நடராஜன் கூறுகையில், கோட்டடைச்சான் வாய்க்கால் சீர்காழி பகுதியில் முக்கிய வடிவாய்க்காலாக இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் தற்போது காவிரி நீருக்கு பதிலாக கழிவு நீர் தான் கலந்து வருகிறது.

இதனை சம்பந்தப்பட்ட துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும். தற்போது இந்த வாய்க்காலில் உள்ள மதகு எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மதகு இடிந்து விழுந்தால் பாசன நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மதகை சீரமைத்து தர வேண்டும் அல்லது புதிதாக கட்டித்தர வேண்டும். மேலும் பாசன வாய்க்கால்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story