சேதமடைந்த நடைபாலத்தை அகற்ற வேண்டும்
தென்குடி-செருவளூரில் சேதமடைந்த நடைபாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த நடைபாலம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடி கிராமம் உள்ளது. இங்கு 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடம் செல்வதற்கும், கூட்டுறவு அங்காடிகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் செருவளூர் கிராமத்திற்கு தான் செல்ல வேண்டும். இந்த கிராமத்திற்கு செல்வதற்காக திருமலைராஜன் ஆற்றின் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த பாலம் சேதமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது.
புதிய பாலம் கட்டித்தர வேண்டும்
இதனால் அந்த பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 2 கிேலா மீட்டர் சுற்றி செருவளூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள நடைபாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.