சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என நாகை நகர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வெளிப்பாளையம்:
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என நாகை நகர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகர் மன்ற கூட்டம்
நாகை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு:-
செந்தில்குமார் (தி.மு.க):- நாகூர் கந்தூரி விழா நடைபெற உள்ளது. பக்தர்கள் அதிகமானோர் வர வாய்ப்பு உள்ளது. தற்போது குப்பைகள் அதிகமாக சேருவதால், அதை கையாள்வதற்கு தூய்மை பணியாளர்கள் போதிய அளவு இல்லை. விழாக்காலம் என்பதால் கூடுதல் பணியாளர்களை நியமித்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
சாலைகளை சீரமைக்க வேண்டும்
சந்தனக்கூடு, கொடி கப்பல்கள் செல்லும் வானகாரத்தெரு, தெற்கு தெரு பகுதியில் உள்ள சிமெண்டு ரோடு பழுதாகி உள்ளது. இந்த சாலைகள் சீரமைக்க வேண்டும்.
பரணிகுமார் (அ.தி.மு.க,):- எனது வார்டுக்குட்பட்ட சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு அக்கரைகுளம் பாலத்தை சீர் செய்ய வேண்டும்.
மாரிமுத்து (தலைவர்):- அடுத்த மாதம் குடிநீர் குழாய்கள் மாற்றுவதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. எனவே குடிநீர் குழாய்கள் மாற்றிய பிறகு அனைத்து சாலைகளும் முழுமையாக சீரமைக்கப்படும்.
ஆரம்ப சுகாதார நிலையம்
நத்தர் (காங்கிரஸ்):- நாகூரில் கந்தூரி விழா நடைபெற உள்ளது முன்னிட்டு செட்டி பல்லக்கு செல்லும் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் கல்லுக்காரத்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள கட்டிடங்கள் மழைநீர் கசிவு ஏற்படுவதை சரிசெய்ய வேண்டும்.
ஜோதிலட்சுமி (இ.கம்யூ):- சாக்கடை வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டும். குப்பை அள்ளுவதற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.காடம்பாடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்.
சுந்தரேஸ்வரி (தி.மு.க):- பெருமாள் கோவில் மேலவீதியில் கடந்த ஒருவாரமாக குடிநீர் வரவில்லை. தீபாவளி அன்றுக்கூட குடிநீர் வராததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு
பதுர்நிஷா (தி.மு.க):- நாகூர் மட்டும் இன்றி அனைத்து முக்கிய சாலைகளிலும் குதிரை, மாடு, நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.
சுரேஷ் (தி.மு.க):- புதியநம்பியார் நகர் சாலையை சீரமைத்து தர வேண்டும். வரி வசூலிப்பு பணியை தொடங்க வேண்டும். கூட்டத்தில் ஒவ்வொரு வார்டுகளிலும் 4 பேர் கொண்ட குழு அமைக்க அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.